சுனந்தா மரண வழக்கில் சசி தரூருக்கு நெருக்கடி: தில்லி நீதிமன்றம் சம்மன்

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பாக, ஜூலை 7-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அவருக்கு தில்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பாக, ஜூலை 7-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அவருக்கு தில்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் சசி தரூக்கு எதிராக குற்றம்சாட்டுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு, தில்லி பெருநகர நீதிமன்றத்தில், கூடுதல் தலைமை நீதிபதி சமர் விஷால் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டியதாகவும், அவருக்கு கொடுமை இழைத்ததாகவும் சசி தரூர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார். இதுதொடர்பாக நீதிபதி கூறியதாவது: எதிர்தரப்பு வாதங்களை கேட்டறிந்தேன். அத்துடன் வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தேன். 
காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டியதாகவும், அவருக்கு கொடுமை இழைத்ததாகவும் சசி தரூர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டேன். இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகள் 306 மற்றும் 498-ஏ ஆகியவற்றின்படி, சசி தரூருக்கு எதிராக குற்றம்சாட்டுவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. எனவே, சசி தரூர் ஜூலை 7-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்'' என்றார் நீதிபதி.
பின்னணி: சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், தில்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இதுதொடர்பாக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறை விசாரணையை தொடங்கியது.
இந்நிலையில், 3000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தில்லி பெருநகர நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்தது. அதில், வழக்கு தொடர்பாக சசி தரூக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என காவல் துறை வலியுறுத்தியிருந்தது.
மேலும், சசி தரூர் குடும்பத்தின் பணியாளர் நாராயண் சிங்கை முதன்மை சாட்சிகளில் ஒருவராக காவல் துறை குறிப்பிட்டுள்ளது.
அதே சமயம், சுனந்தா புஷ்கருக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சசி தரூர் தொந்தரவு அளித்ததாக குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கு அர்த்தமற்றது''
சசி தரூருக்கு எதிரான சம்மன் குறித்து அவரது வழக்குரைஞர், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தரூர் மீது எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. இந்த வழக்கு அர்த்தமற்றதாகவும், அபத்தமாகவும் உள்ளது'' என்றார்.
அவர் மேலும் கூறுகையில், வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை நாங்கள் கேட்டு வாங்குவோம். அவற்றை ஆய்வு செய்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் முடிவு செய்வோம்'' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com