/

கூடுதல் சுமைகளுக்கு அபராதம்: முடிவை நிறுத்தி வைத்தது ரயில்வே

ரயில்களில் கூடுதலாக சுமைகளைக் கொண்டு செல்லும் பயணிகளுக்கு 6 மடங்கு அபராதம் விதிக்கும் முடிவை ரயில்வே துறை நிறுத்தி வைத்துள்ளது.

Updated On :8 ஜூன் 2018, 12:44 am IST

ரயில்களில் கூடுதலாக சுமைகளைக் கொண்டு செல்லும் பயணிகளுக்கு 6 மடங்கு அபராதம் விதிக்கும் முடிவை ரயில்வே துறை நிறுத்தி வைத்துள்ளது.
பயணிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே, அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்ததாக ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.
தற்போதைய விதிகளின்படி, படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் செல்பவர்கள், அதிகபட்சமாக, 40 கிலோ வரையிலான பொருள்களை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம். கட்டணம் செலுத்தி 80 கிலோ வரையிலான பொருள்களை எடுத்துச் செல்லலாம். இதேபோல், இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் 35 கிலோ வரையிலான பொருள்களை எடுத்துச் செல்லலாம். கட்டணம் செலுத்தி, 70 கிலோ வரையிலான பொருள்களை எடுத்துச் செல்லலாம். கூடுதலான எடை கொண்ட பொருள்களை தனிப் பெட்டியில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், கூடுதலாக சுமைகளைக் கொண்டு செல்லும் பயணிகளிடம் 6 மடங்கு அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ரயில்வே துறையின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ரயில்வே துறை தனது முடிவை நிறுத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் வாஜ்பாய், வியாழக்கிழமை கூறியதாவது: கோடை விடுமுறையில் ரயில்களில் அதிக அளவு கூட்டம் காணப்பட்டது. பயணிகள் அதிக பொருள்களை எடுத்துச் சென்றதால், சக பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது ரயில்வே துறையின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கூடுதல் சுமைகளை எடுத்துச் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற 30 ஆண்டுகளுக்கு முந்தைய விதிமுறை நினைவூட்டப்பட்டது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.