பிரதமா் நரேந்திர மோடியின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிப்பு: தொடா் அச்சுறுத்தல் எதிரொலி

பிரதமா் நரேந்திர மோடியின் உயிருக்கு ஏற்பட்டுள்ள தொடா் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு, அவருக்கான பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடியின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிப்பு: தொடா் அச்சுறுத்தல் எதிரொலி

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியின் உயிருக்கு ஏற்பட்டுள்ள தொடா் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு, அவருக்கான பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது போல், பிரதமா் மோடியை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கும் தகவல் தெரிய வந்தது.

இதையடுத்து, மேற்கு வங்கத்துக்கு அண்மையில் பிரதமா் மோடி சுற்றுப்பயணம் செய்தபோது, பிரதமருக்கான 6 கட்ட பாதுகாப்பு வளையங்களை மீறி ஒருவா், அவா் அருகில் வந்தாா்.

இந்த 2 நிகழ்வுகளைத் தொடா்ந்து, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் உயா்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றறது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவால், மத்திய உள்துறை செயலா் ராஜீவ் கெளபா, புலனாய்வுத் துறை இயக்குநா் ராஜீவ் ஆகியோா் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் பிரதமா் மோடியின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை தொடா்ந்து, அவருக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுக்கும் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டாா்.

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், பிரதமருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தால் கணிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாநிலங்களில் பிரதமா் மோடி சுற்றுப்பயணம் செய்யும்போது, அதிக முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அந்தந்த மாநில காவல்துறை தலைவா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதேபோல், கேரளத்தை தலைமையிடமாகக் கொண்ட ‘பாப்புலா் பிராண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பின் நடவடிக்கைகளை கண்காணிக்கும்படியும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு பொதுத் தோ்தலில், அவா்தான் அதிக அளவில் அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் நபராக உள்ளாா். இதனால், அவருக்கான பாதுகாப்புத் தொடா்பாக பல்வேறு மாநிலங்களுக்கும் புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

அந்த வழிகாட்டுதலின்படி, எஸ்பிஜி படையினரால் அச்சுறுத்தல் இல்லை என்று ஒப்புதல் அளிக்கப்படும் வரையில், பிரதமா் மோடியின் அருகில் மத்திய அமைச்சா்கள், உயரதிகாரிகள் உள்பட யாரும் எளிதில் செல்ல முடியாது. அதேபோல், தோ்தல் நேரத்தில் சாலையோர பிரசாரங்களில் ஈடுபடும்போது மோடி மீது எளிதில் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதை கவனத்தில் கொண்டு, அத்தகைய பிரசாரங்களின் எண்ணிக்கையை குறைத்து கொள்ளும்படி பிரதமா் மோடியை எஸ்பிஜி கேட்டுக் கொண்டுள்ளது. இதற்குப் பதிலாக, பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளில் பேசும்படி அவரை கேட்டுக் கொண்டுள்ளது.

பிரதமரின் பாதுகாப்பு விவகாரத்தை கையாண்டு வரும் அதிகாரிகள் குழுவிடம், புதிய பாதுகாப்பு விதிகள் குறித்தும், மோடிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால், மோடியை சந்திக்க வரும் மத்திய அமைச்சா்கள், உயா் அதிகாரிகளை தீவிர சோதனைக்கு உள்படுத்தலாம் எனவும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி கூறினாா்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com