கர்நாடகத்தில் உலகின் மிகப்பெரிய சூரியஒளி மின் பூங்கா: முதல்வர் சித்தராமையா தொடக்கிவைத்தார்

கர்நாடகத்தில் 2 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட உலகின் மிகப் பெரிய சூரிய ஒளி மின் பூங்காவை முதல்வர் சித்தராமையா தொடக்கிவைத்தார்.
கர்நாடகத்தில் உலகின் மிகப்பெரிய சூரியஒளி மின் பூங்கா: முதல்வர் சித்தராமையா தொடக்கிவைத்தார்
Updated on
1 min read

கர்நாடகத்தில் 2 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட உலகின் மிகப் பெரிய சூரிய ஒளி மின் பூங்காவை முதல்வர் சித்தராமையா தொடக்கிவைத்தார்.
கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம் பாவகடா வட்டத்தைச் சேர்ந்த திருமணி கிராமத்தில் 2 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய சூரியஒளி மின் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 13 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள இப் பூங்கா ரூ.14,500 கோடி முதலீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 
2,300 விவசாயிகளிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.21 ஆயிரம் வீதம் 28 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் பெறப்பட்டுள்ள விளைநிலத்தில் இப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குத்தகை தொகை 2 ஆண்டுக்கு ஒருமுறை 5 சதவீதம் உயர்த்தப்படும். இந்தத் திட்டத்தால் 4 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அரசு தெரிவித்துள்ளது.
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இப் பகுதிக்கு இத் திட்டம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. திருமணி கிராமத்தில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வெங்கடம்மனஹள்ளி கிராமத்தில் 2004-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்த காவல் முகாம் மீது மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்தினர். 
இதில் கர்நாடக மாநில ஆயுதப் படையைச் சேர்ந்த 9 வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். வறுமையால் வாடியிருந்த இக் கிராம மக்கள், நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தில் இருந்து வந்தனர். வறுமையைப் போக்கி விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இத் திட்டம் அமைந்துள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். 
திருமணி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் சூரிய ஒளி மின் உற்பத்திப் பூங்காவை முதல்வர் சித்தராமையா தொடக்கி வைத்தார். இந்த விழாவில், மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
தற்போதைக்கு 600 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. நிகழாண்டின் இறுதியில் 2 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி சாத்தியமாகும் என்று மின் துறைஅமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com