நீரவ் மோடி வழக்கு: முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது சிபிஐ

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி வரை கடன் வாங்கி விட்டு வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரபல தொழிலதிபர் நீரவ் மோடிக்குச் சொந்தமான வீடு ஒன்றில் இருந்து பல முக்கிய ஆவணங்களை சிபிஐ
Updated on
1 min read

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி வரை கடன் வாங்கி விட்டு வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரபல தொழிலதிபர் நீரவ் மோடிக்குச் சொந்தமான வீடு ஒன்றில் இருந்து பல முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை கைப்பற்றினர்.
மும்பை புறநகர்ப் பகுதியான வடாலாவில் உள்ள ஒரு கட்டடத்தின் சிறிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி உத்தரவாத கடிதங்கள் தொடர்பான ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினர். அந்த கட்டடம், நீரவ் மோடிக்குச் சொந்தமானதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்தச் சோதனை நடைபெற்றது.
இதனிடையே, வெளிநாடுகளில் வர்த்தகப் பணிகளில் மூழ்கியிருப்பதால், இந்தியாவுக்கு வர முடியாது என்று நீரவ் மோடி, விசாரணை அமைப்புகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதையடுத்து, எந்த வெளிநாட்டில் இருந்தாலும், அங்குள்ள இந்தியத் தூதரகத்துக்குச் சென்று விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சிபிஐ வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், நீரவ் மோடி, இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
முன்னதாக, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி வரை கடன் பெற்ற நீரவ் மோடி, அவரது மனைவி ஆமி, சகோதரர் நிஷால், உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோர் வெளிநாடு தப்பிச் சென்று விட்டனர். அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றன.
அதைத் தொடர்ந்து, நீரவ் மோடிக்குச் சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, இதுவரை ரூ.6,000 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது.
வங்கிக் கணக்குகள் முடக்கம்: இதனிடையே, பாரத ஸ்டேட் வங்கியின் துபை, பஹ்ரைன் மற்றும் பெல்ஜியத்தின் ஆண்டர்ப் நகரங்களில் கிளைகளில் உள்ள நீரவ் மோடிக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளை வங்கி நிர்வாகம் வியாழக்கிழமை முடக்கி வைத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com