பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியா முக்கியமான நாடு: அமெரிக்கா

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியா மிகவும் முக்கியமான நாடு என்று அமெரிக்கா கூறியுள்ளது. 
Updated on
1 min read

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியா மிகவும் முக்கியமான நாடு என்று அமெரிக்கா கூறியுள்ளது. 
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை முற்றிலுமாக ஒழிப்பது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்பு படையினர் ஒருங்கிணைப்பாளர் நாதன் சேல்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளி நாடாக இந்தியா விளங்குகிறது. இந்த விஷயத்தில் அமெரிக்காவின் மிகவும் நம்பிக்கைக்குரிய நாடும் இந்தியாதான். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்- இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த விஷயத்துக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அவர்களது சந்திப்புகளில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் எதிர்காலத்தில் இந்தியாவுடனான அமெரிக்காவின் ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும்.
2016-ஆம் ஆண்டு முதல் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்த தகவல்களை இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்து வருகிறது என்றார் அவர்.
சமீபகாலமாக இந்தியா அளித்து வரும் வலுவான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டுக்கு அமெரிக்கா கடும் நெருக்கடி அளித்தது.
பயங்கரவாத ஒழிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிடம் நிதியுதவியைப் பெற்றுக் கொண்டு பாகிஸ்தான் ஏமாற்றிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். மேலும், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த அனைத்து நிதியுதவிகளையும் நிறுத்துவதாகவும் அவர் அதிரடியாக அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com