ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கு: கைதிலிருந்து கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் இரு நாட்களுக்கு பாதுகாப்பு! 

ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதில் இருந்து கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் இரு நாட்களுக்கு பாதுகாப்பு அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கு: கைதிலிருந்து கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் இரு நாட்களுக்கு பாதுகாப்பு! 
Updated on
1 min read

புதுதில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதில் இருந்து கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் இரு நாட்களுக்கு பாதுகாப்பு அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டார்; இதற்காக அவருடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா ரூ.35 கோடியை கைமாறாக அளித்தது என்றும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இதில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தை ஆதாரமாகக் கொண்டு, கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இதே விவகாரத்தில் நடைபெற்ற கருப்புப் பண முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அதேநேரம் அமலாக்கத்துறை இந்த வழக்கில் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுகிறது என்றும், தனக்கு விதிக்கப்பட்ட சம்மன்களை ரத்து செய்யக் கோரியும்,  கார்த்தி சிதம்பரம் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கானது தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளியன்று (9- ஆம் தேதி)   விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 20-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு, அமலாக்கத் துறை ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதில் இருந்து கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் இரு நாட்களுக்கு பாதுகாப்பு அளித்து வியாழன் அன்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வியாழனன்று நீதிபதிகள் முரளிதர் மற்றும் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு கார்த்தி சிதம்பரத்தின் தரப்பு வழக்கறிஞர் ஆஜரானார். அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்காக முதலில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வரும் 20-ஆம் தேதியன்று ஆஜராக இயலாத நிலை என்பதால், வழக்கு விசாரணையை 22-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கக் கோரினார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத் திவாகர் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்காததால், வழக்கு விசாரணையை 20-ஆம் தேதிக்கு பதிலாக,  22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதில் இருந்து கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் இரு நாட்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com