6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து: தில்லி விரைகிறார் சந்திரபாபு நாயுடு

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவைத் திரட்டுவதற்காக, அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, வரும் 2-ம் தேதி தில்லி செல்கிறார்.

News image
Updated On :29 மார்ச் 2018, 7:43 pm

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவைத் திரட்டுவதற்காக, அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, வரும் 2-ம் தேதி தில்லி செல்கிறார்.
இதுதொடர்பாக, தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை கூறியதாவது:
ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது.
ஆந்திரத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை, பாஜக கூட்டணி அல்லாத கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து, அவர்களிடம் சந்திரபாபு நாயுடு எடுத்துரைக்கவுள்ளார். இதற்காக, வரும் 2-ஆம் தேதி அவர் தில்லி விரைகிறார்.
இந்தப் பயணத்தின்போது, அவர் யார் யாரைச் சந்திக்கிறார் என்று தெரியவில்லை. எனினும், இதற்கு முன்பே, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் ஆதரவு கேட்டு, அவர்களுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார் என்று தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, ஆந்திர சட்டப் பேரவையில் வியாழக்கிழமை பேசிய சந்திரபாபு நாயுடு, ''ஆந்திரத்தின் உரிமையைப் பெறுவதற்காக, ஒவ்வொரு கட்சியையும் ஒருங்கிணைத்துப் போராடுவேன். மாநிலத்தின் வளர்ச்சியே எனது நோக்கம்; அரசியல் செய்வது அல்ல'' என்றார்.
தில்லி செல்லும் சந்திரபாபு நாயுடு குறைந்தது 10 நாள்கள் அங்கு தங்கியிருந்து, பல்வேறு கட்சித் தலைவர்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகளும், சில அமைப்புகளும் ஆலோசனை தெரிவித்துல்ளன.
இருப்பினும், தற்போது பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால், தில்லியில் 10 நாள்கள் தன்னால் தங்க முடியாது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துவிட்டார். ஒருவேளை பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால், சந்திரபாபு நாயுடு மேலும் ஓரிரு நாள்கள் தில்லியில் தங்குவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.