மிரட்டும் தொனியில் பேசும் பிரதமரை எச்சரியுங்கள்
காங்கிரஸ் தலைவர்களை மிரட்டும் தொனியில் பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடியை எச்சரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அக்கட்சியின் மூத்த


காங்கிரஸ் தலைவர்களை மிரட்டும் தொனியில் பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடியை எச்சரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பிரதமர் மோடி பயன்படுத்திய வார்த்தைகளை சுட்டிக் காட்டி எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆஸாத், அகமது படேல், ப.சிதம்பரம், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, கரண் சிங், அம்பிகா சோனி, கமல் நாத், ஆனந்த்
சர்மா, மோதிலால் வோரா, திக்விஜய்சிங், முகுல் வாஸ்னிக் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் கடந்த 6-ஆம் தேதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, "காங்கிரஸ் தலைவர்களே தெளிவாக கேட்டுக் கொள்ளுங்கள்.
நீங்கள் எல்லை மீறி நடந்துகொள்ள வேண்டாம். ஏனென்றால் நான் மோடி... நீங்கள் கடுமையான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்' என்றார்.
130 கோடி மக்களைக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டை ஆட்சி செய்யக் கூடிய அரசமைப்புச் சட்ட பதவியில் இருக்கும் ஒருவர் இதுபோன்று பேசுவது முறையற்றது.
நாட்டில் இதுவரை பிரதமர் பதவி வகித்தவர்கள் அனைவரும், பொது நிகழ்ச்சியிலோ தனிப்பட்ட நிகழ்ச்சியிலோ பேசும்போது தங்களது பதவிக்கான கண்ணியத்தை காத்து வந்துள்ளனர்.
ஆனால், காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான பிரதமர் மோடியின் பேச்சுகள் முறையற்றதாகவும், அச்சுறுத்தும் வகையிலும் உள்ளன. இது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்பதுடன் கடும் கண்டனத்துக்குரியதாகும். காங்கிரஸ் தலைவர்களை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் பிரயோகிக்கும் வார்த்தைகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளன.
நமது நாட்டை பொருத்தவரை பிரதமர் பதவியானது, அரசமைப்புச் சட்டரீதியில் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாகும். எனவே, காங்கிரஸ் தலைவர்களையோ அல்லது வேறெந்த கட்சியின் தலைவர்களையோ அச்சுறுத்தும் தொனியில் பேச வேண்டாம் என்று பிரதமரை நீங்கள் (குடிரசுத் தலைவர்) எச்சரிக்க வேண்டும்.
நமது நாட்டில் காங்கிரஸ் கட்சி மிகவும் பழமையான கட்சியாகும். பல்வேறு சவால்களையும் அச்சுறுத்தல்களையும் நாங்கள் எதிர்கொண்டு வந்துள்ளோம். எந்த அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். எனினும், அரசமைப்புரீதியில் நாட்டின் தலைவர் என்ற முறையில் பிரதமருக்கு அறிவுரை வழங்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு (குடியரசுத் தலைவர்) உள்ளது என்று கடிதத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், பிரதமர் பேசிய விடியோவுக்கான யூ-டியூப் லிங்க்கையும் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...