/

அருண் ஜேட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 

Updated On :14 மே 2018, 6:56 pm

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரி கூறியதாவது:
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜேட்லி கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை மையத்துக்கு ஜேட்லி திங்கள்கிழமை காலை 8 மணிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகமாக மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு, ஜேட்லி, அவருக்கு சிறுநீரகம் அளித்த நபர் ஆகியோரது உடல்நிலை சீராக உள்ளது. அவர்களது உடல்நிலை குணமடைந்து வருகிறது என்றார் அவர்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், "ஜேட்லிக்கு அப்போலோ மருத்துவமனை மருத்துவரும், எய்மஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியாவின் சகோதரருமான சந்தீப் குலேரியா உள்ளிட்டோர் அறுவை சிகிச்சை செய்தனர்' என்றன.
இந்தியா-பிரிட்டன் இடையேயான 10-ஆவது பொருளாதார மற்றும் நிதித் தொடர்பான பேச்சுவார்த்தை, லண்டனில் அடுத்த வாரம் நடக்கவுள்ளது. இதில் இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தனது உடல்நிலையை காரணம் காட்டி, லண்டன் பயணத்தை அருண் ஜேட்லி ரத்து செய்து விட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதியன்று, சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளிலும், தனக்கு உடல்நிலை சரியில்லாததை அருண் ஜேட்லி குறிப்பிட்டிருந்தார்.
அருண் ஜேட்லி செய்து கொள்ளும், 3-ஆவது அறுவை சிகிச்சை இதுவாகும். முதலாவதாக, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, இதய அறுவை சிகிச்சையை அருண் ஜேட்லி செய்திருந்தார். இதைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் உடல் எடையை கட்டுப்படுத்த கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.