

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வகையில் வெற்றி பெறவில்லை. இதனால் இழுபறி நீடிக்கிறது.
எனினும், மத்தியில் ஆளும் பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளிலும், மற்றவை 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
அதிகத் தொகுதிகளைப் கைப்பற்றிய பாஜக வெற்றி பெற்றதாகப் பார்க்கப்பட்டாலும், அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாக காங்கிரஸ் கட்சியே உள்ளது. 104 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக வெறும் 36.2% வாக்குகளையே அதாவது 1,31,59,117 வாக்குகளையே பெற்றுள்ளது.
ஆனால், 78 தொகுதிகளில் வென்றாலும், 38 சதவீத வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி சாதனை படைத்துள்ளது. இது 1,38,00,205 வாக்குகளாகும்.
100 தொகுதிகளில் முன்னிலை என்றதுமே, ஆட்சியமைப்பது உறுதி என்று பாஜக எண்ணியது. ஆனால், 78 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ், 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற மஜதவுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியதால் பாஜக சற்றே கலங்கிப் போனது.
இந்த நிலையில், ஆட்சியமைப்பதில் பாஜக ஒருபக்கமும், மறு பக்கத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணியும் தீவிரம் காட்டி வருகின்றன. இரு கட்சித் தலைவர்களுமே ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
எந்த கட்சி ஆட்சியமைத்தாலும் சரி, பாஜகவை விட குறைந்த தொகுதிகளையே பெற்றாலும், அதிக வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, கர்நாடக மக்களின் மனங்களை வென்றுள்ளது என்பதே நிதர்சனம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.