நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பட்டாசு இல்லாத தீபாவளிக்குத் தயாராகும் தில்லி!

தேசியத் தலைநகரான தில்லியில் நிகழ் பருவத்தில் தொடர்ந்து காற்று மாசின் தாக்கம் நீடித்து வரும் சூழலில், உச்சநீதிமன்றம் பசுமைப் பட்டாசுகள் விற்பனை செய்ய பிறப்பித்த உத்தரவு காரணமாக

News image
Updated On :3 நவம்பர் 2018, 2:55 am

வே.சுந்தரேஸ்வரன்

தேசியத் தலைநகரான தில்லியில் நிகழ் பருவத்தில் தொடர்ந்து காற்று மாசின் தாக்கம் நீடித்து வரும் சூழலில், உச்சநீதிமன்றம் பசுமைப் பட்டாசுகள் விற்பனை செய்ய பிறப்பித்த உத்தரவு காரணமாக வரும் நவம்பர் 7-ஆம் தேதி பட்டாசு இல்லாத தீபாவளி கொண்டாட்டத்திற்கு தலைநகர்வாசிகள் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளித் திருநாள் நாடு முழுவதும் கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை பல இடங்களிலும் கொண்டாடப்படுவது வழக்கம். புத்தாடைகள் அணிந்து, இனிப்பு பதார்த்தங்களை பகிர்ந்து சாப்பிட்டு மகிழ்வுடன் தீபாவளியை மக்கள் கொண்டாடுவர். அதிலும் குறிப்பாக, தீபாவளி நாளில் பட்டாசு வெடித்தும், வாணவேடிக்கைகளுடன் தீபாவளியைக் கொண்டாடுவது பன்னெடுங்கால மரபாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், சமீப ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதிப்புக்கு தீபாவளியில் வெடிக்கப்படும் பட்டாசுகளும் ஒரு காரணியாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறி பட்டாசு தயாரிப்பு, விற்பனைக்கு தடை கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அண்மையில் சில அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தது.   

நாடு முழுவதும் தீபாவளி மற்றும் இதர பண்டிகைகளின் போது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்றும், தேசியத் தலைநகரான தில்லியில் பசுமை பட்டாசுகள்தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் சில கட்டுப்பாடுகள் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு காரணமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை தலைநகர்வாசிகள் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்ப கொண்டாடும் வகையில் அரசுத் துறைகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

தில்லியில் தீபாவளி நாளில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் பட்டாசுகள் வெடிப்பதற்கு பொதுமக்களிடம் காவல் துறையும், தன்னார்வ நல அமைப்புகளும், அரசுத் துறையினரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

தெற்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில் பூங்காக்கள், மைதானங்கள் உள்ளிட்ட 700 இடங்களில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெறிச்சோடிய பட்டாசு மார்க்கெட்: வெறிச்சோடிய பட்டாசு மார்க்கெட்: இதுஒருபுறம் இருக்க, தில்லியில் பட்டாசு விற்பனைக் கடைகள் அதிகம் உள்ள ஜாமா மசூதி பகுதியில் சில தினங்களாக குறிப்பாக உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, பட்டாசுக் கடைகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. தில்லியில் குறைக்கப்பட்ட மாசுடன் கூடிய (பசுமைப் பட்டாசுகள்) தான் விற்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அத்தகைய பட்டாசுகள் இருப்பு இல்லாததால் காரணமாகவே பட்டாசுகளை விற்காமல் கடைகளை அடைத்துள்ளதாக அப்பகுதி வியாபாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், வழக்கமாக பட்டாசு வாங்க பல பகுதிகளில் இருந்து ஜாமா மசூதி பகுதி மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களும் கடைகள் மூடப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதைக் காண முடிந்தது.

வியாபார இழப்பு ஏற்படும்: இது குறித்து பட்டாசு விற்பனையாளர்கள் வட்டாரங்கள் கூறுகையில், "தில்லியில் தீபாவளிப் பண்டிகைக்கு 10 தினங்களுக்கு முன்பாகவே பட்டாசு விற்பதற்கான உரிமத்துக்கு அனுமதி அளிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கிவிடும். 

இந்த ஆண்டு உரிமம் கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பலமுறை சென்றும், இதுவரை உரிமங்கள் ஏதும் வழங்கப்படவில்லை. மேலும், பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால், மிகப்பெரிய வியாபார இழப்பு ஏற்படும் நிலை உள்ளது' என்றனர்.

மொத்தத்தில் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தில்லிவாசிகள் பட்டாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாத் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதுதான் நிதர்சன உண்மை.

நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படும் - போலீஸார்

இது குறித்து போலீஸார் கூறுகையில், "தலைநகர், என்சிஆர் பகுதியில் குறைக்கப்பட்ட மாசுடன் கூடிய பட்டாசுகள் மட்டுமே விற்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதாலும், இதுபோன்ற தரத்துடன் கூடிய பட்டாசுகளை விற்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கும் வகையில், நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பட்டாசு விற்பதற்கு அனுமதி கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை விட இந்த ஆண்டு இதற்கான விண்ணப்பங்கள் குறைவாகத்தான் வந்துள்ளன. பசுமை பட்டாசுகள் விற்பனையை உறுதிப்படுத்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்படும்' என்றனர்.

காற்று மாசுவைத் தடுக்க தீவிர நடவடிக்கை!

தில்லியில் பட்டாசுகள் விற்பனைக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருப்பதற்கு தில்லியின் சுற்றுப்புறக் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு பிரதான காரணமாகக் கூறப்படுகிறது.  சுற்றுப்புற காற்றில் பி.எம். 2.5, பிஎம் 10 ஆகிய நுண்துகள்களின் பரவல் அதிகமாக இருப்பது உடல் நலத்திற்கு தீங்கிழைக்கக் கூடியதாக உள்ளது. இதற்கு கட்டுமானங்களின் செயல்பாடுகள், தில்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா போன்றவற்றில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகள், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை , நிலக்கரி மற்றும் உயிரி எரிவாயு மூலம் இயக்கப்படும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயுக்கள் ஆகியவை காரணமாக இருந்து வருகின்றன. இதனால், தில்லியில் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அரசும், தில்லி அரசும் முனைப்புக் காட்டி வருகின்றன. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு ஆணையகமும் அவ்வப்போது பரிந்துரைகளை அளித்து வருகிறது. 

இந்நிலையில், ஓரிரு தினங்களில் தலைநகரில் காற்றின் ஒட்டுமொத்தக் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையில் இருந்து கடுமையான பிரிவுக்கு சென்றதால், பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து வருகிறது. காற்று மாசு காரணமாக வானிலையில் தெளிவற்ற நிலை இருப்பதாலும், பல்வேறு உடல் உபாதைகளுக்கும் பொதுமக்கள் ஆளாகி வருகின்றனர். இந்த சூழலில்தான் தில்லியில் பசுமைப் பட்டாசு மட்டுமே விற்கப்பட வேண்டும் என்ற அதிரடி உத்தரவை உச்ச நீதிமன்றத்தின் பிறப்பித்திருப்பதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகவும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதுகின்றனர்.

போலீஸாரின் கெடுபிடிதான் அதிகரிக்கும்!

ஆக்ராவைச் சேர்ந்த முதியவர் சத்பால் சிங் (70) கூறுகையில், "வழக்கமாக பட்டாசு வாங்க தில்லி ஜாமா மசூதி மார்க்கெட் பகுதிக்கு வருவது வழக்கம். அதுபோலத்தான் தற்போதும் வந்தேன். ஆனால், கடைகள் பூட்டப்பட்டுள்ளன. பட்டாசு விற்பனைக்கு கடைசி நேரத்தில் தடை விதிக்காமல் முன்கூட்டியே தடை விதித்திருந்தால் நுகர்வோருக்கும் அலைச்சல் ஏற்படாது. மேலும், இந்த உத்தரவால் போலீஸாரின் கெடுபிடிதான் அதிகரிக்கும்' என்றார்.

"முகக்கவசத்துடன் குழந்தைகள்'

குடும்பத் தலைவி இந்திரா கூறுகையில், "நான் 20 ஆண்டுகளாக தில்லியில் வசித்து வருகிறேன். தற்போதுதான் சில ஆண்டுகளாக காற்று மாசு மிகவும் மோசமாக இருக்கிறது. அதுவும் தீபாவளிக்குப் பிறகு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. எனது குழந்தைகள் முகக் கவசம் அணிந்து பள்ளி செல்லும் நிலை உள்ளது. இதுபோன்ற சூழலில் காற்று மேலும் மாசு அடையாமல் இருப்பதற்கான நடவடிக்கையாக நீதிமன்றத்தின் உத்தரவைப் பார்க்க வேண்டும்' என்றார்.

பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் 

மங்கோல்புரியைச் சேர்ந்த வியாபாரி முரளிதர் (38) கூறுகையில், "மது அருந்துவது, புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டால், அது அவரது செயலுக்கான பலன் எனலாம். ஆனால், பட்டாசு வெடிப்பதால் பட்டாசு வெடிக்காத நபர்களும் ஒலி, காற்று மாசுவால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும், தில்லியில் இரவில்தான் அதிகமாக பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் குழந்தைகள் தூங்க முடிவதில்லை. இந்த விஷயத்தில் எல்லோரும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் யாருக்கும் தீங்கு வராது' என்றார். 

பசுமைப் பட்டாசுளால் நீடிக்கும் குழப்பம்

பசுமைப் பட்டாசுகள் விற்பனை தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைத் தொடர்ந்து  தில்லி ஜாமா மசூதி பகுதியில் மார்க்கெட்டில் பல்வேறு பிராண்டுகள் பட்டாசு விநியோகஸ்தர்களின் கடைகள் தொடர்ந்து சில நாள்களாக மூடப்பட்டுள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த நிரந்தர பட்டாசு விற்பனைக் கடைகள் தவிர,  தற்காலிமாக தீபாவளிப் பண்டிகைக்காக மட்டும் பட்டாசு விற்பதற்காக உரிமங்கள் கோரி காவல் துறையினரிடம் விண்ணப்பங்கள் அளிப்பது வழக்கம். இந்நிலையில், பசுமைப் பட்டாசுகளைக் கொள்முதல் செய்து, விற்பது தொடர்பாக பட்டாசு விநியோகஸ்தர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதாவது, கடைகளில் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே இருக்க வேண்டிய நிலை உள்ளதாலும்,  இதற்காக போலீஸாரிடம் அனுமதி பெற வேண்டியுள்ளதாலும்  கடைகளை மூடியிருப்பதாகத் தெரிகிறது.  இதனால்,  போலீஸாரிடம் அனுமதி பெற்ற பிறகே கடைகளைத் திறப்பதற்கு பட்டாசு விநியோகஸ்தர்கள் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

படங்கள்:டி.ராமகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.