தொழில் போட்டி அதிகரித்துள்ளதால் இந்தியாவில் சில துறைகளில் நெருக்கடி அதிகம் உள்ளது; ஒரு நாடு பொருளாதாரரீதியாக வேகமாக வளரும் காலகட்டத்தில் இதுபோன்ற சவால்கள் ஏற்படுவது சகஜமானதுதான் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
அண்மையில், தொலைத்தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் ஜியோ வருகையால், பல நிறுவனங்கள் நெருக்கடியைச் சந்தித்து, விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் திங்கள்கிழமை இந்திய தொழில்போட்டி கண்காணிப்பு ஆணையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இது தொடர்பாக அமைச்சர் ஜேட்லி பேசியதாவது:
தொழிலில் தாங்கள்தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது, தொழில் போட்டி ஏற்படுவது சகஜமானதுதான். இதுபோன்ற தொழில் போட்டி அதிகம் உள்ள துறைகளில் நெருக்கடிகளும் அதிகமாகவே இருக்கும். ஒரு நாடு பொருளாதார ரீதியாக வேகமாக வளரும்போது இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்படுவது சகஜமானதுதான்.
அதே நேரத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தவே, இந்திய தொழில்போட்டி கண்காணிப்பு ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போட்டி அதிகரிக்கும் நேரத்தில் இதுபோன்ற அமைப்புகளின் பணியும் மேம்படும்.
நமது நாட்டின் பொருளாதாரம் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இதே வேகத்தில் நாடு அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்னேறும்போது, நாம் பல சாதனைகளைப் படைக்க முடியும்.
இந்தியாவில் இப்போது சேவைகள் துறையின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.
அனைத்துத் துறைகளிலும் ஏற்படும் போட்டிகளை கண்காணித்து ஒழுங்குபடுத்த சிறப்பான அமைப்புகள் உள்ளன. இதுபோன்ற அமைப்புகளின் நோக்கம் அனைத்தும் நுகர்வோருக்கு சிறப்பான, தரமான சேவை மற்றும் பொருள்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வது மட்டும்தான்.
நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து நிறுவனங்களும் முழுத்திறனுடன் செயல்பட்டு சந்தையில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே மத்திய அரசு விரும்புகிறது.
அதே நேரத்தில் நுகர்வோர்களின் நலன்களைக் காப்பதும் மிகவும் முக்கியமானது என்றார் அருண் ஜேட்லி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமாதானத் தூதராக உருவெடுத்துள்ளது பாகிஸ்தான்: ஷெபாஸ் ஷெரீஃப் பெருமிதம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாட வேண்டும்: ஸ்மிருதி மந்தனா

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு!






