அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

வெளி மாநிலத்தவர் மீது தாக்குதல் குஜராத் முதல்வருடன் நிதீஷ், யோகி ஆதித்யநாத் பேச்சு

குஜராத் மாநிலத்தில் வெளி மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானியுடன் பிகார் முதல்வர்

News image
Updated On :9 அக்டோபர் 2018, 1:16 am IST


குஜராத் மாநிலத்தில் வெளி மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானியுடன் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தொலைபேசியில் பேசினர். அப்போது, வெளி மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு அவர்கள் கவலை தெரிவித்தனர்.
குஜராத் மாநிலத்தில் பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கட்டுமானத் தொழிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், சபர்கந்தா மாவட்டத்தில் சிறுமி ஒருவரை, பிகாரைச் சேர்ந்தவர் கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வெளி மாநிலத்தவர்களை மோசமாக சித்திரித்து சமூக ஊடகங்களின் வழியாக வெளியிடப்பட்ட தகவல்கள், மாநிலம் முழுவதும் வேகமாகப் பரவின. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்கள் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உள்ளூர் மக்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி ஆயிரக் கணக்கானோர் தங்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானியை ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நீதிஷ் குமார், குஜராத் தாக்குதல் சம்பவங்களுக்கு கவலை தெரிவித்தார். அப்பாவி மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் நிதீஷ் குமார் வலியுறுத்தினார். 
இதுகுறித்து, பாட்னா நகரில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது: 
தவறு செய்தது யாராக இருந்தாலும், அவர், நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர். ஒருவர் தவறு செய்துவிட்டார் என்பதற்காக, அவர் சார்ந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களும், அவரைப் போலவே இருப்பார்கள் என்று பொதுமைப்படுத்தி கருதிவிடக் கூடாது என்று விஜய் ரூபானியிடம் தெரிவித்தேன். மேலும், பிகார் மாநிலத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, பிகார் தலைமைச் செயலர், காவல் துறை டிஜிபி ஆகியோர் குஜராத் மாநில தலைமைச் செயலர், காவல் துறை டிஜிபி ஆகியோரை அடிக்கடி தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்து வருகிறார்கள் என்றார் நிதீஷ் குமார்.
யோகி ஆதித்யநாத் பேச்சு: இதேபோல், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், விஜய் ரூபானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மாநிலத்தில் அனைவருடைய பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்று விஜய் ரூபானி வாக்குறுதி அளித்தார் என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.
குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை விரும்பாத சிலர், வன்முறையை தூண்டி விடுகிறார்கள். மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, வதந்திகளை நம்பாமல், மக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விஜய் ரூபானி கூறியுள்ளார் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
342 பேர் கைது: இதனிடையே, வெளிமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 342 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக, 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குஜராத்தில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 20,000 பேர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.