
பொதுத் துறை வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா தொடங்கிய கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சாதகமாக செயல்பட்டது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
லண்டனில் உள்ள விஜய் மல்லையா, இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்பு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகக் கூறினார்.
இதையடுத்து, அவர் தப்பிச் சென்றதில் ஜேட்லியும் உடந்தையாக இருந்தார் என்றும், அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ராகுலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்' விமானத்தில் ராகுல் காந்தியின் குடும்பத்தினர் இலவசமாக பயணித்தனர். ஹவாலா மோசடியில் ஈடுபட்ட ஒருவர் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும், கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கும் தொடர்பிருந்ததாகக் கூறியுள்ளார். மல்லையாவுக்கும், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கும் ஒட்டுமொத்த ராகுல் காந்தி குடும்பமும் சாதகமாகச் செயல்பட்டிருக்கிறது என்பதே உண்மை.
மோசமான நிலையில் இருந்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு கடனுதவி அளிக்க பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு இடையே கடிதப் பரிமாற்றங்கள் நடந்தன. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி விதிமுறைகளை தளர்த்தி அந்நிறுவனத்துக்கு சாதகமாகச் செயல்பட்டுள்ளார்.
ஒரு சில சமயங்களில் அந்த நிறுவனத்தை சோனியா காந்தி குடும்பமே நிர்வகிப்பது போன்று இருந்திருக்கிறது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள ராகுல் காந்தி, மற்றவர்களின் ஊழல் குறித்து கேள்வி எழுப்ப உரிமையில்லை என்றார் சம்பித் பத்ரா.
மத்திய அமைச்சர்கள் ஆதரவு: இதனிடையே, மல்லையா விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவரும் நிதி அமைச்சர் ஜேட்லிக்கு சக மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். மல்லையா ஒரு குற்றவாளி; அவரின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், விதிமுறைகளை மீறி, விஜய் மல்லையாவுக்கு கடன் அளிக்குமாறு முந்தைய காங்கிரஸ் அரசு வங்கிகளுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது. ராகுல் காந்தியின் குடும்பத்தினர் மல்லையாவுடன் நட்பு பாராட்டியது குறித்து ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும். ராகுல் காந்திதான் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜிநாமா செய்ய வேண்டும்' என்றார்.
நிர்மலா சீதாராமன்: மல்லையா உடனான சந்திப்பு விவகாரத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மல்லையாவுக்கு ஆதரவாக செயல்பட்டதை திசைதிருப்பவே இவ்வாறு அக்கட்சி ஜேட்லிக்கு எதிராக குற்றம்சாட்டுகிறது' என்றார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜேட்லியும், மல்லையாவும் சந்தித்து பேசியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி.யான புனியா கூறியது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, அந்த விடியோ பதிவில் அவர்கள் பேசியதும் பதிவாகியிருக்குமா?' என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். இவர்களை போல், ஜேட்லிக்கு ஆதரவாக மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சுட்டுரையில் கருத்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







