அமைதியைக் கெடுப்பவர்களுக்கு ராணுவம் பதிலடி: பிரதமர் நரேந்திர மோடி

"நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு ராணுவம் உரிய பதிலடி அளித்து வருகிறது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமைதியைக் கெடுப்பவர்களுக்கு ராணுவம் பதிலடி: பிரதமர் நரேந்திர மோடி

"நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு ராணுவம் உரிய பதிலடி அளித்து வருகிறது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். "இந்தியா அமைதியை விரும்புகிறது; ஆனால் அதற்காக ஒருபோதும் சுயமரியாதையையும், இறையாண்மையையும் விட்டுத் தராது' என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு அவர் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரு வாரங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று, நியூயார்க்கில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேச மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருந்தது. அதன்படி, இந்த வாரம் ஐ.நா. சபைக் கூட்டத்தின்போது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்தூம் மஹ்மூத் குரேஷியும் சந்தித்துப் பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 3 போலீஸார் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாலும், இந்திய பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்ட பயங்கரவாதி பர்ஹான் வானியைப் புகழும் வகையில் பாகிஸ்தான் அரசு அஞ்சல்தலை வெளியிட்டதாலும் இந்தப் பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காகவே இந்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்ததாக பாகிஸ்தான் தரப்பு குற்றம்சாட்டியது. இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அமைதிக்கு இடையூறு நடந்தால்... : "மனதின் குரல்' (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:

கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம் அண்மையில் அனுசரிக்கப்பட்டது. பயங்கரவாதத்தின் மூலம் நமது நாட்டின் மீது மறைமுகப் போர் தொடுத்தவர்களுக்கு நமது ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்த தினம் அது. இதன் மூலம் நமது நாட்டின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக ராணுவம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடாகவே இருக்கிறது. ஆனால், அதற்காக சுயமரியாதையும், நாட்டின் இறையாண்மையும் ஒருபோதும் விட்டுத் தரப்படாது.

ராணுவத்தின் பெருமை: ஐ.நா. அமைதிப்படைக்கு அதிக அளவு வீரர்களை அனுப்பி வைத்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றும். இதன் மூலம் கடந்த 40 ஆண்டுகளாக சர்வதேச அமைதியில் இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது.
துல்லியத் தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதன் மூலம் இளைஞர்கள் நமது ராணுவத்தின் பெருமையையும், சாதனைகளையும் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் நாட்டின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் மேம்படும். 

அக்டோபர் 8-ஆம் தேதி விமானப் படை தினம் கொண்டாடப்படுகிறது. 1947-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தான் கைப்பற்ற முயன்றபோதும், 1965, 1971-ஆம் ஆண்டு போர்களின்போதும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற கார்கில் போரின்போதும் விமானப்படையின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. இது தவிர நாட்டில் பேரிடர் காலங்களில் மீட்பு, நிவாரணப் பணிகளின் மூலம் மக்களின் மனதில் விமானப் படையினர் இடம் பிடித்துள்ளனர். அண்மையில் அந்தப் படையில் பாலின சமத்துவம் நிலைநாட்டப்பட்டு, பெண்களுக்கு முக்கியப் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

மனித உரிமைப் பாதுகாப்பு: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 25-ஆவது ஆண்டு தினம் அக்டோபரில் கொண்டாடப்பட இருக்கிறது. "ஒன்றிணைந்த முயற்சி; அனைவருக்கும் வளர்ச்சி' என்ற மத்திய அரசின் அடிப்படைக் கொள்கை, மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டதுதான். நாட்டில் மனித உரிமைகள் காக்கப்படுவதன் அவசியத்தை நாம் அனைவரும் உணர வேண்டும். நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம் மனித உரிமைகளைக் காப்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பொருள்களை வாங்கும் போது...: நாம் பொருள்களை வாங்குவதற்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாயும், தேவையானவர்களைச் சென்றடைய வேண்டும். தங்கள் திறமையையும், உழைப்பையும் அர்ப்பணித்து பொருள்களைத் தயாரிப்பவர்களிடம் இருந்து அவற்றை வாங்க வேண்டும். "நான் வாங்கும் ஒவ்வொரு பொருள் மூலமும் அதன் உற்பத்தியின் பின்னணியில் இருக்கும் ஏழை, எளிய உழைப்பாளிகளுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்' என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். அவரது வார்த்தைகளை நாம் ஒவ்வொரு வரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் மோடி.


பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விரட்டியடிப்பு


ஜம்மு, செப்.30: இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஹெலிகாப்டர் விரட்டி யடிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.10 மணியளவில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஊடுருவியது. அப்போது எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய பாதுகாப்புப் படையினர் ஹெலிகாப்டரை நோக்கிச் சுட்டனர். இதைத் தொடர்ந்து, அந்த ஹெலிகாப்டர் பாகிஸ்தான் பகுதிக்குள் திரும்பி சென்று விட்டது.
இதுகுறித்து இந்திய ராணுவத்தின் மக்கள் தொடர்பு துறை அதிகாரி தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், "அந்த ஹெலிகாப்டர், பொது மக்கள் பயணிக்கக்கூடிய ஹெலிகாப்டராக இருக்க வாய்ப்புள்ளது; மிக அதிக உயரத்தில் அந்த ஹெலிகாப்டர் பறந்தது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com