வன்முறையில் ஈடுபட்ட குற்றத்துக்காக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் கைது!

தில்லி ஜாமா மசூதி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 'பீம் ஆர்மி' அமைப்பின் தலைவர் சந்திரசேகர ஆசாத்தை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்ட குற்றத்துக்காக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் கைது!


தில்லி ஜாமா மசூதி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 'பீம் ஆர்மி' அமைப்பின் தலைவர் சந்திரசேகர ஆசாத்தை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லியில் தடையை மீறியும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில், தில்லி ஜாமா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாகச் செல்ல 'பீம் ஆர்மி' அமைப்பின் தலைவர் சந்திரசேகர ஆசாத் நேற்று (வெள்ளிக்கிழமை) அழைப்பு விடுத்தார். ஆனால், இந்தப் பேரணிக்கு தில்லி போலீஸார் அனுமதி வழங்கவில்லை. எனவே, இந்தப் பேரணி தடையை மீறியும் நடைபெற்றது.

எனவே, தில்லி கேட் பகுதியில் போலீஸார் தடுப்புகளை அமைத்து பேரணியைத் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து, இந்தப் பேரணி வன்முறையில் நிறைவடைந்தது. இதன் காரணமாக, நேற்று மாலை பேரணியில் பங்கேற்ற சந்திரசேகர ஆசாத்தைக் கைது செய்ய தில்லி போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால், மசூதியின் வெளியே ஏராளமான மக்கள் கூடினர். ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டனர்.

இதன்பிறகு, மசூதிக்கு வருமாறு தில்லி போலீஸாருக்கு சந்திரசேகர் ஆசாத் தகவல் கொடுத்திருந்தார். இதையடுத்து, மசூதியைவிட்டு வெளியே வருமாறு மூத்த போலீஸ் அதிகாரிகள் அவரைக் கேட்டுக்கொண்டனர். ஆனால், இது நீண்ட நேரம் நீடித்து வந்தது. இதையடுத்து, சனிக்கிழமை அதிகாலை 3.15 மணியளவிலேயே சந்திரசேகர ஆசாத் வெளியே வர சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து, தாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை எனக் குறிப்பிட்டு பேசிய சந்திரசேகர ஆசாத்,

"இந்தச் சட்டம் திரும்பப் பெறுவதற்கு நாம் ஒரு சில தியாகங்களைச் செய்ய வேண்டும். நாங்கள் வன்முறையை ஆதரிக்கவில்லை. வெள்ளிக்கிழமை காலை முதல் நாங்கள் மசூதியின் உள்ளே அமர்ந்திருக்கிறோம். எங்கள் மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. போலீஸார் வெகுஜன மக்கள்போல் உடை அணிந்து போராட்டத்தைத் தடுக்க வன்முறையைத் தூண்டுகின்றனர்" என்றார்.

இத்தனை பாதுகாப்புகளையும் மீறி எப்படி உள்ளே சென்றீர்கள் என்று எழுப்பிய கேள்விக்குப் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பதிலளித்த அவர், "என் பெயர் சந்திரசேகர ஆசாத். போலீஸாரால் என்னை சிறைபிடிக்க முடியாது. தொப்பியை அணிந்து, சால்வையுடன் மசூதிக்குள் எளிதாக நுழைந்தேன்" என்றார்.

இதையடுத்து, தனது ஆதரவாளர்களிடம் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தும்படி கேட்டுக்கொண்ட அவர்,

"வன்முறையில் ஈடுபவர்கள் நம் மக்கள் கிடையாது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமா மசூதியில் நமது அமைதிப் போராட்டம் தொடரும். அம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள்" என்றார். இதன்பிறகு, போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாக சந்திரசேகர ஆசாத் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இதுகுறித்து தெரிவிக்கையில்,

"வன்முறையில் ஈடுபடுதல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், சட்டவிரோதச் செயலில் ஈடுபடுதல், கடுமையான சேதத்தை உண்டாக்கியது ஆகிய காரணங்களுக்காக அவரைக் கைது செய்துள்ளோம். அவர்தான் கும்பலை வழிநடத்தினார்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com