இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கொல்கத்தா காவல்ஆணையருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்தால்.. உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.

News image
Updated On :4 பிப்ரவரி 2019, 6:05 am

PTI


புது தில்லி: சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.

ரோஸ் வேலி மற்றும் சாரதா நிதி நிறுவனங்களின் மோசடி வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக ராஜீவ் குமாரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும், அதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை என்றும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்குச் சென்றால் டிஜிபி ராஜீவ்குமார் தடைகளை ஏற்படுத்துவதாகவும் சிபிஐ புகார் கூறியிருந்தது.

இந்த செய்தி தொடர்பாக மேலும் அறிந்து கொள்ள.. சிபிஐ நடவடிக்கையை எதிர்த்து மம்தா தர்னா

கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. அப்போது கொல்கத்தா ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிரான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்ய உள்ளது.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போது, காவல்துறை ஆணையருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்தால், அவர் வருந்தும் அளவுக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

பிரச்னை என்ன?: மேற்கு வங்கத்தில் கொடிகட்டிப் பறந்த "ரோஸ் வேலி', "சாரதா சிட்பண்ட்ஸ்' ஆகிய இரு நிதி நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கியவர் ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார். அவர் தற்போது கொல்கத்தா மாநகர காவல்துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

முன்னதாக, நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரித்தபோது, வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதுதொடர்பாக விசாரிப்பதற்காக பலமுறை சிபிஐ சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை என்றும், ஆகவே அவர் கைது செய்யப்படலாம் என்றும் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை கூறியிருந்தனர். 

சிபிஐ அதிகாரிகள் தடுத்துநிறுத்தம்: இந்நிலையில், ராஜீவ் குமாரை விசாரிக்க வேண்டும் என்று மேற்கு வங்க காவல்துறைக்கு சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தகவல் அளித்தனர்.  அதையடுத்து, அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு செல்லுமாறு சிபிஐ அதிகாரிகளை காவல்துறை அறிவுறுத்தியது.

அதேசமயம், சிபிஐ அதிகாரிகளில் ஒரு பிரிவினர், ராஜீவ் குமார் இல்லத்துக்கு சென்றனர். அவர்களை காவலாளிகள் தடுத்து நிறுத்தினர். 

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறை உயரதிகாரிகள் விரைந்து சென்றனர். ராஜீவ் குமாரை விசாரிப்பதற்கு உரிய ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் உள்ளனவா என்று அவர்கள் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. 

திடீர் போராட்டம்:  இந்நிலையில், கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8.45 மணியளவில் மம்தா பானர்ஜி, "அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்' என்ற பெயரில் தர்னா  போராட்டத்தை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

தங்களை எதிர்க்கும் மாநில அரசுகளைக் கலைத்துவிட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிபிஐ அமைப்பை அவர்கள் ஏவி விட்டுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும். மத்திய அரசுக்கு எதிரான எனது போராட்டத்துக்கு அனைத்து பிராந்தியக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். அவரது இந்த தர்னா நள்ளிரவைத் தாண்டியும் தொடர்ந்தது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு: மம்தாவின் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தில்லி முதல்வர் கேஜரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தது குறித்து உச்சநீதிமன்றத்தை சிபிஐ நாடியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.