இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சிபிஐ நடவடிக்கையை எதிர்த்து மம்தா தர்னா

கொல்கத்தா காவல்துறை தலைவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகளை மத்திய அரசு தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டி மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி

News image

கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு தர்னா மேற்கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

Updated On :3 பிப்ரவரி 2019, 11:03 pm

DIN

கொல்கத்தா காவல்துறை தலைவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகளை மத்திய அரசு தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டி மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேற்கு வங்க மாநில அரசை கவிழ்க்க வேண்டும் என்று மோடி - அமித் ஷா அணி சதி செய்து வருவதாகவும்  குற்றம்சாட்டினார்.

நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்குகளில் கொல்கத்தா மாநகர காவல்துறை தலைவர் ராஜீவ் குமாரை விசாரிக்க சிபிஐ ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து, மம்தா இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதே சமயம், விசாரணைக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், வலுக்கட்டாயமாக காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்னை என்ன?: மேற்கு வங்கத்தில் கொடிகட்டிப் பறந்த "ரோஸ் வேலி', "சாரதா சிட்பண்ட்ஸ்' ஆகிய இரு நிதி நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கியவர் ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார். அவர் தற்போது கொல்கத்தா மாநகர காவல்துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

முன்னதாக, நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரித்தபோது, வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதுதொடர்பாக விசாரிப்பதற்காக பலமுறை சிபிஐ சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை என்றும், ஆகவே அவர் கைது செய்யப்படலாம் என்றும் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை கூறியிருந்தனர். 

சிபிஐ அதிகாரிகள் தடுத்துநிறுத்தம்: இந்நிலையில், ராஜீவ் குமாரை விசாரிக்க வேண்டும் என்று மேற்கு வங்க காவல்துறைக்கு சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தகவல் அளித்தனர்.  அதையடுத்து, அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு செல்லுமாறு சிபிஐ அதிகாரிகளை  காவல்துறை அறிவுறுத்தியது.

அதேசமயம், சிபிஐ அதிகாரிகளில் ஒரு பிரிவினர், ராஜீவ் குமார் இல்லத்துக்கு சென்றனர். அவர்களை காவலாளிகள் தடுத்து நிறுத்தினர். 

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறை உயரதிகாரிகள் விரைந்து சென்றனர். ராஜீவ் குமாரை விசாரிப்பதற்கு உரிய ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் உள்ளனவா என்று அவர்கள் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. 

பின்னர், சிபிஐ அதிகாரிகளை வலுக்கட்டாயமாக காவல்துறையின் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, காவல்நிலையத்துக்கு அவர்கள் அழைத்துச் சென்றனர். அழைத்துச் செல்லப்பட்ட சிபிஐ அதிகாரிகள் பின்னர் போலீஸார் விடுவித்துவிட்டனர். கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தது குறித்து உச்சநீதிமன்றத்தை நாட சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் போராட்டம்:  இந்நிலையில், கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8.45 மணியளவில் மம்தா பானர்ஜி, "அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்' என்ற பெயரில் தர்னா  போராட்டத்தை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

தங்களை எதிர்க்கும் மாநில அரசுகளைக் கலைத்துவிட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிபிஐ அமைப்பை அவர்கள் ஏவி விட்டுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும். மத்திய அரசுக்கு எதிரான எனது போராட்டத்துக்கு அனைத்து பிராந்தியக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். அவரது இந்த தர்னா நள்ளிரவைத் தாண்டியும் தொடர்ந்தது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு: மம்தாவின் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தில்லி முதல்வர் கேஜரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.