மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மூன்று நாள் தர்ணா வாபஸ் 

மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் மூன்று நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மூன்று நாள் தர்ணா வாபஸ் 

கொல்கத்தா: மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் மூன்று நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார்

மேற்கு வங்கத்தில் "சாரதா சிட்பண்ட்ஸ்', "ரோஸ் வேலி' ஆகிய இரு நிதி நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் கோடிக்கணக்கான ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளை, சிபிஐ விசாரித்து வருகிறது. மேற்கண்ட நிறுவனங்களுடன் தொடர்புடையதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான மின்னணு ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக, கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

இதுதொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தாவிலுள்ள அவரது இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சென்றனர். ஆனால், உரிய ஆவணங்களின்றி விசாரணை நடத்த வந்துள்ளதாக கூறி, அவர்களை காவல்துறை உயரதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

பின்னர், அவர்களை வலுக்கட்டாயமாக  காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்துக்கு பிறகு, சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். மேற்கு வங்க காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே,  மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி, "அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்' என்ற பெயரில் கொல்கத்தாவின் மெட்ரோ சேனல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவில் தர்னாவை தொடங்கினார்.  அங்கு அமைக்கப்பட்ட தற்காலிக மேடையில் திங்கள்கிழமை 2-ஆவது நாளாக தர்னா போராட்டம் தொடர்ந்தது. இதேபோல், மாநிலம் முழுவதும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை சாலை, ரயில் மறியல்களில் ஈடுபட்டனர். 

இதனிடையே செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி கூறியதாவது: நமது நாட்டையும், அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற லட்சியத்தை எட்டும் வரையில் எனது போராட்டம் தொடரும். அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற வேண்டும். உருவ பொம்மைகளை எரிக்க வேண்டாம்.  எனது போராட்டம், வரும் 8-ஆம் தேதி வரை தொடரும்' என்றார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் மூன்று நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

முன்னதாக தனது அதிகாரிகள் நடத்தப்பட்ட விதம் தொடர்பாக சிபிஐ  உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை செவ்வாயன்று காலை விசாரித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியதாவது

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்யக் கூடாது. அதே சமயம் சிபிஐ விசாரணைக்காக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும்.

சிபிஐ தொடர்ந்த வழக்கு குறித்து மேற்கு வங்க முதன்மைச் செயலரும், காவல்துறை டிஜிபி மற்றும் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோர் பிப்ரவரி 18ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். பிப்ரவரி 20ம் தேதியன்று நடைபெறும் விசாரணையன்று 3 பேரும் நேரில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சிபிஐ தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தங்களுக்கே வெற்றி கிடைத்திருப்பதாக 3வது நாளாக கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி அறிவித்தார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து ஆதரவளித்த நிலையில், ஜனநாயகத்திற்கும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் கிடைத்துள்ள வெற்றியைத் தொடர்ந்து தனது தர்ணா போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக மம்தா செவ்வாய் மாலை அறிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com