/

தேசமா? குடும்பமா?: காங்கிரஸ் மீது மோடி தாக்கு

தேசத்துக்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பீர்களா? அல்லது குடும்பத்துக்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பீர்களா? என்று நாட்டு மக்களுக்கு பிரதமர்

News image

புது தில்லியில் தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படைத் தளபதிகள்.

Updated On :26 பிப்ரவரி 2019, 4:22 am IST


தேசத்துக்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பீர்களா? அல்லது குடும்பத்துக்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பீர்களா? என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கேள்வியெழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வகையில், இந்த கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
தில்லியின் இந்தியா கேட் பகுதியில் சுமார் ரூ.176 கோடி செலவில் தேசிய போர் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி  கலந்து கொண்டு, அங்கிருந்த அணையா விளக்கில் தீபம் ஏற்றி, தேசிய போர் நினைவிடத்தை திறந்து வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது:
இந்திய ராணுவம் சுயசார்புடையதாக திகழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுத்து வருகிறது. இதற்கு முன்பு சாத்தியப்படாது என்று கருதப்பட்ட முடிவுகள், தற்போது சாத்தியமாகி வருகின்றன. வீரர்கள் பலரின் உயிர் தியாகங்களால், உலகில் சக்திவாய்ந்த ராணுவங்களில் ஒன்றாக இந்திய ராணுவம் தற்போது திகழ்கிறது என்றார்.
அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களை நோக்கி, தேசத்துக்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பீர்களா? அல்லது குடும்பத்துக்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பீர்களா? என பிரதமர் மோடி கேள்வியெழுப்பினார். காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வகையில், இந்த கேள்வியை மோடி எழுப்பினார். அவர் மேலும் கூறியதாவது:
சிலருக்கு நாட்டை விட ஒரு குடும்பம்தான் (சோனியா காந்தி குடும்பம்) மிகவும் முக்கியமானதாக தெரிகிறது. சிலர் தங்களது வருமானத்துக்கான ஆதாரமாக பாதுகாப்புப் படைகளை கருதினர். நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களை நினைவுகூர்வதால், தங்களுக்கு எதுவும் கிடைக்காது என கருதி, அவர்களை மறந்துவிடுவதென அந்த நபர்கள் முடிவு செய்தனர்.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரத்தில் தொடங்கி, விஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் வரையிலும், அனைத்து விசாரணைகளும், ஒரு குடும்பத்தை நோக்கியே செல்கின்றன (சோனியா காந்தி குடும்பத்தை குறிப்பிட்டார்). இத்தகைய நபர்கள், ரஃபேல் போர் விமானங்கள், நமது நாட்டுக்கு வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இன்னும் சில மாதங்களில், ரஃபேல் போர் விமானங்கள், நமது வானில் பறக்கும். ரஃபேல் தொடர்பான சதிகள் அனைத்தும் தகர்த்தெறியப்படும்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பாதுகாப்புப் படைகள் மீதும், தேசப் பாதுகாப்பிலும் அலட்சியம் காட்டப்பட்டது. பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த பல முடிவுகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் தற்போது ஒப்புதல் கொடுக்கப்படுகின்றன. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. இதனால் அவர்களுக்கான ஓய்வூதியம் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
தேசிய போர் நினைவிடம் அமைப்பது தொடர்பாக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பான நடவடிக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் அதில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், நாட்டு மக்களின் ஆசீர்வாதத்துடன், அந்த பணிகளை 2014ஆம் ஆண்டில் நாங்கள் தொடங்கினோம். தற்போது அந்தப் பணிகள் முடிந்து, நாட்டுக்கு தேசிய போர் நினைவிடத்தை திறந்து வைத்துள்ளோம். ஏற்கெனவே நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் இந்த நினைவிட பணி முடிவடைந்து திறந்து வைத்துள்ளோம்.
கடந்த 2009ஆம் ஆண்டில், பாதுகாப்புப் படைகள் 1,86,000 புல்லட் புரூப் ஆடைகள் தேவைப்படுவதாக கோரிக்கை வைத்தன. ஆனால், அந்த கவச ஆடைகள் இல்லாமலேயே எதிரிகளை பாதுகாப்புப் படைகள் எதிர்கொண்டன. அதேநேரத்தில், மத்திய பாஜக அரசு கடந்த 4.5 ஆண்டுகளில் 2,30,000 புல்லட் புரூப் ஆடைகளை வாங்கியுள்ளது. போர் விமானங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பாக இந்திய விமானப்படை எடுத்து முடிவை வரவேற்கிறேன். தேசிய போர் நினைவிடம் போன்று, தேசிய போலீஸ் நினைவிடமும் பிரச்னையை எதிர்கொண்டது. ஆனால் அந்தக் கோரிக்கையையும் மத்திய அரசு பூர்த்தி செய்துள்ளது.
தற்போதைய இந்தியா, புதிய இந்தியாவாகும். இந்த இந்தியா, புதிய கொள்கைகள், புதிய பாரம்பரியங்களை கொண்டதாகும். சர்வதேச அளவில் சாதனை படைப்பதை நோக்கி, புதிய இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்றார் மோடி. 
அங்கு  வைக்கப்பட்டுள்ள வருகையாளர் ஏட்டில், நமது வீரர்களின் வீரம், தியாகம், துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சின்னம் இது; நாட்டுக்காக வாழ வேண்டும், நாட்டுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நம்மை இந்த சின்னம் ஊக்குவிக்கும். வீரம், தியாகத்தின் புண்ணிய தலமான இதற்கு வணக்கத்தை செலுத்துகிறேன் எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக, அணையா விளக்கு அருகே மோடி, நிர்மலா சீதாராமன், முப்படை தலைமைத் தளபதிகள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்தியா கேட் பகுதியில் அமர்ஜவான் ஜோதியிலிருந்து கிழக்கு பக்கத்தில் தேசிய போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அதில் அணையா தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான திட்டம், 1961ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. ஆனால், சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அது நிறைவேறியுள்ளது.
நாடு சுதந்திரமடைந்தபிறகு நடைபெற்ற போர்கள் உள்ளிட்ட பல்வேறு மோதல்களில் உயிர்நீத்த வீரர்கள், 25,942 பேரின் பெயர்கள், நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
தேசிய போர் நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சியில், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படைகளின் தலைமை தளபதிகள், முன்னாள் ராணுவத்தினர், ராணுவ வீரர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.