அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தேதி விசாரணை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நீதிபதி போப்டே அன்றைய தினத்தில் விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.
அயோத்தி வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் சமமாகப் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
ஆனால், அதை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை தவிர்த்து, அதைச் சுற்றி கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த மாதம் 27-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
சுப்பிரமணியன் சுவாமிக்கு அறிவுறுத்தல்: அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் வழிபடுவது எனது அடிப்படை உரிமை; அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அயோத்தி நிலம் தொடர்பான பிரதான வழக்கின் விசாரணை நடைபெறும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவுறுத்தியது. அப்போது, அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி, சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நிராகரித்துவிட்டது. இதையடுத்து, அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் வழிபாடு நடத்துவது தனது அடிப்படை உரிமை என்ற வாதத்தை முன்வைத்து புதிய மனுவை அவர் தாக்கல் செய்தார்.
அதில், வழிபாடு நடத்துவது, அரசியல் சாசனத்தின்கீழ் நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். எனவே, அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் எனது வழிபாட்டுரிமையை செயல்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பத்ம ஸ்ரீ பெற்றுக்கொண்ட எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி! - முழுப் பட்டியல்

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்!

வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டு சுற்றுப்பயணம் சென்றது ஏன்? பிரதமருக்கு கார்கே கேள்வி!







