நாடு முழுவதும் உள்ள கணினிகளை கண்காணிப்பதற்கு எதிரான பொது நல மனுக்கள் தொடர்பாக, 6 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க, சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு அமைப்பு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி அனுமதியளித்தது.
மத்திய அரசின் இந்த அனுமதி தன்மறைப்பு உரிமையை மீறுவதாகக் கூறி வழக்குரைஞர் மனோகர் லால் சர்மா உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். மேலும், நீதிபதிகள் உள்பட பல மூத்த அதிகாரிகளின் கணினிகள் மற்றும் தொலைபேசிகள் கண்காணிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மனோகர் லால் சர்மா தாக்கல் செய்த மனுவில், நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க மத்திய அரசு அனுமதி கொடுத்து, மக்களின் அடிப்படை உரிமையான தன்மறைப்பு சுதந்திர உரிமையை மீறியுள்ளது. சட்டவிரோதமாகவும், அரசியலமைப்புச் சட்டத்தை மீறியும் இந்த அனுமதியை வழங்கியுள்ளனர். மேலும், அந்த அனுமதியின்படி, விசாரணை அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவரது மனுவுடன் சேர்த்து, கணினிகள் கண்காணிப்புக்கு எதிரான அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எஸ்.கே. கெளல் ஆகியோரும் இருந்தனர். அப்போது, இந்த மனுக்கள் தொடர்பாக 6 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் உள்ள தகவல்களை கண்காணிக்க, நுண்ணறிவு பிரிவு(ஐ. பி.), அமலாக்கத் துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, வருவாய் புலனாய்வுத் துறை, ரா உளவு அமைப்பு, தில்லி காவல் துறை, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு விசாரணை அமைப்பு ஆகிய 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்து. இதற்கு காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய அரசின் முடிவை எதிர்த்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










