காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்: விரைவில் கூடுகிறது காரியக் கமிட்டி
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அக்கட்சியின் காரியக் கமிட்டி விரைவில் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அக்கட்சியின் காரியக் கமிட்டி விரைவில் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
17-வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையான தோல்வியைச் சந்தித்ததையடுத்து, கடந்த மே 25-ஆம் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது ராஜிநாமா முடிவை அறிவித்தார். ஆனால், கட்சி நிர்வாகிகள் அவரது முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், கட்சியை சீரமைப்பதற்கான அதிகாரமும் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டது.
எனினும், ராகுல் காந்தி தனது ராஜிநாமா முடிவில் உறுதியாக இருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருந்தன. நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள், ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு வழிகளில் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், மகாராஷ்டிர காங்கிரஸ் செயலாளர் சோனல் படேல், மாணிக்ராவ் தாக்கரே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நானா படோல், மாநிலங்களவை உறுப்பினர் ஹுசைன் தல்வாய், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்ணிக், மகாராஷ்டிர காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, கட்சியின் தலைமை மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களான அசோக் கெலாட் (ராஜஸ்தான்), அமரீந்தர் சிங் (பஞ்சாப்), கமல்நாத் (மத்தியப் பிரதேசம்), பூபேஷ் பகேல் (சத்தீஸ்கர்), நாராயணசாமி (புதுச்சேரி) ஆகியோர், தில்லியில் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, கட்சியின் தலைவராக அவரே தொடர வேண்டும் என்று சமாதானம் செய்தனர்.
ஆனால், அதற்கும் ராகுல் காந்தி பணியவில்லை என்றே தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் குறித்து முடிவு எடுக்க காரியக் கமிட்டி விரைவில் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்சியின் தலைமைப் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, 16-வது மக்களவையின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரது பெயர் அடிபடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...