

ஆதிவாசி பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையோடு வலம் வர வேண்டியவர் மருத்துவர் பாயல் தாத்வி. ஆனால் அவர் தற்போது புகைப்படமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார்.
பாயல் தாத்வி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய தற்கொலைக் கடிதத்தின் நகல் அவர் பயன்படுத்திய செல்போனில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதன் மூலம், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 3 மருத்துவர்களும், தற்கொலைக் கடிதத்தை காவல்துறையினருக்குத் தெரியாமல் அழித்திருப்பது அம்பலமாகியுள்ளது.
இது குறித்து தாத்வியின் வழக்கில் ஆஜராகி வாதாடி வரும் வழக்குரைஞர் குணரத்ன சதவர்தே கூறுகையில், குற்றம்சாட்டப்பட்ட 3 மருத்துவர்களும், தாத்வியின் தற்கொலைக் கடிதத்தை எடுத்து அழிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவரது தற்கொலைக் கடிதத்தின் நகல் தாத்வியின் செல்போனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தடயவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்று கூறினார்.
பிஒய்எல் நாயர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த பாயல் தாத்வி கடந்த மே மாதம் 22ம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மும்பையில் அரசு மருத்துவமனையில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு மகப்பேறு முதுகலை மருத்துவம் படித்துக் கொண்டிருந்த பாயல் தாத்வியின் சாதியை சொல்லிச் சொல்லி ராகிங் செய்வதும், துன்புறுத்துவதுமாக இருந்து, அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்த கல்லூரியின் மூத்த மாணவிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே நேற்று பக்தி மெஹர் கைதான நிலையில், இன்று ஹேமா அஹுஜா, அங்கிதா கந்தேல்வால் ஆகியோர் கைதாகியுள்ளனர்.
பாயல் தாத்வியை சாதியக் கொடுமை செய்வதாக ஏற்கனவே கல்லூரி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்காததே, தங்களது மகள் உயிரிழப்புக்குக் காரணமாகிவிட்டதாகக் கூறி கதறும் பெற்றோர், எங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, எங்கள் சமுதாயத்திலேயே அவள்தான் முதல் மருத்துவர் என்று சொல்லி சொல்லி மாய்ந்தது நினைவிருக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.