சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர், பாஜக எம்எல்ஏ பீமா மண்டவி உள்பட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் ஆவார்.
இதுதொடர்பாக தண்டேவாடா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா கூறியதாவது:
ஹிரோலி வனப் பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பின்னர், நக்ஸல்கள் தப்பியோடிவிட்டனர். அப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், குட்டி என்ற நக்ஸல் தீவிரவாதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
தண்டேவாடா மாவட்டத்தின் ஷியாம்கிரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நக்ஸல்கள் நடத்திய குண்டுவெடிப்பில் பாஜக எம்எல்ஏ பீமா மண்டவியும், அவரது பாதுகாவலர்கள் நால்வரும் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் உள்பட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் குட்டிக்கு தொடர்புள்ளது. ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து, இவர் தேடப்பட்டு வந்த நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றார் அபிஷேக் பல்லவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







