/

தீர்ப்பை வழங்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யார்? தீர்ப்பு எப்படி வழங்கப்படும்?

ஒட்டு மொத்த நாடே காத்திருக்கும் அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. 

News image
Updated On :9 நவம்பர் 2019, 4:49 am

DIN

ஒட்டு மொத்த நாடே காத்திருக்கும் அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.

இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்க உள்ளது.

தீர்ப்பளிக்க உள்ள நீதிபதிகள்..

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு இந்த தீர்ப்பை அளிக்க உள்ளது.

தீர்ப்பை எப்படி வழங்குவார்கள்?

ஐந்து நீதிபதிகளும் தங்களது தீர்ப்புகளை தனித்தனியாக வழங்கலாம். தங்களது தீர்ப்பை வழங்கி, அந்த முடிவை எடுக்கக் காரணம் என்ன என்பதையும் அவர்களே விளக்கலாம். அல்லது, ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த முடிவெடுத்து, தீர்ப்பில் கையெழுத்திட்டு, தலைமை நீதிபதியிடம் கொடுத்து, அவரே தீர்ப்பை வாசிக்கலாம். 

ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும்?

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் போது ஊடகங்கள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதாவது, ஒரு நீதிபதி தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்ததும், உடனடியாக அதனை வெளியிடாமல், ஒட்டுமொத்தமாக ஐந்து நீதிபதிகளும் தீர்ப்பை வழங்கிய பிறகு முழுமையான தீர்ப்பை வெளியிட வேண்டும் என்பது ஊடகங்களுக்கு சமூகக் கடமையாகிறது.

வழக்கைப் பற்றி அறிய வேண்டுமா?

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபா் மசூதி அமைந்திருந்த சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிா்மோஹி அகாரா, மூலவா் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனா். இதுதொடா்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், அந்த நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்தது.

Story image

அந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்தது.

இந்த விவகாரத்தில் சமரசத் தீா்வு காண்பதற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் நியமித்தது. அந்தக் குழுவின் சமரசப் பேச்சுவாா்த்தையில் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றம் வாதங்களைக் கேட்டு வந்தது. அனைத்து வாதங்களையும் அக்டோபா் 17-ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தொடா்ந்து 40 நாள்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அக்டோபா் 16-ஆம் தேதியுடன் இறுதிவாதங்கள் நிறைவடைந்தன.

இன்று தீர்ப்பு வெளியாகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.