ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ப. சிதம்பரம், தற்போது நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சூழலில், அவரை கைது செய்து விசாரிக்க அனுமதி கேட்டு, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த தில்லி சிறப்பு நீதிமன்றம், ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதி அளித்து தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தேவைப்பட்டால் விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்து கொள்ளலாம் என்றும் அமலாக்கத் துறைக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, அமலாக்கத் துறையினர் தில்லி திகார் சிறையில் வைத்து சிதம்பரத்திடம் நாளை விசாரணை நடத்துகின்றனர்.
முன்னதாக, இந்த மனு மீது நீதிபதி அஜய் குமார் குஹர் முன் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான குற்றங்கள் தனியானவை. இந்த விவகாரத்தில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்று உச்சநீதிமன்றமே குறிப்பிட்டிருக்கிறது’ என்று வாதிட்டார்.