மோடி பதவியேற்பு விழா சிறப்பு: நாவில் எச்சில் ஊற வைக்கும் அந்த ரெசிபி பற்றி கிடைத்த ரகசிய தகவல்

இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களுக்காக மிகச் சிறந்த ரெசிபி ஒன்று தயாராகி வருகிறது.
மோடி பதவியேற்பு விழா சிறப்பு: நாவில் எச்சில் ஊற வைக்கும் அந்த ரெசிபி பற்றி கிடைத்த ரகசிய தகவல்


புது தில்லி: இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களுக்காக மிகச் சிறந்த ரெசிபி ஒன்று தயாராகி வருகிறது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றும் சிறந்த சமையல் நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட அந்த ரெசிபியின் பெயர் 'டால் ரெய்சினா'. மா கி டால் என்றும் இதனை கூறுகிறார்கள்.

இன்றைய பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களுக்கு சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்படுகிறது. மேலும் விருந்தை சிறப்பாக சூப், மீன், கோழிக்கறி, காய்கறிகளுடன் சுடச்சுட டால் ரெய்சினா பரிமாறப்பட உள்ளது.

இது எங்கள் சமையலறையில் தயாரிக்கப்படும் சிறப்பான உணவாகும். இதனை தயாரிக்க சுமார் 48 மணி நேரங்களாக சமையல் நிபுணர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மே 28ம் தேதி முதல் இந்த டால் ரெய்சினா தயாரிப்புப் பணிகள் தொடங்கி இன்று வரை நடக்கும் என்கிறார் சமையல் நிபுணர் மாலிக்.

இந்தியப் பிரபலங்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டுத் தலைவர்களும் பங்கேற்பதால், குடியரசுத் தலைவர் மாளிகையில் உணவு தயாரிப்பில் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது.

டால் ரெய்சினா என்றால் நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவையுடன் இருக்குமாம். தோல் உரிக்காத உளுத்தம் பருப்பு, தக்காளிச் சாறு சேர்த்து இந்த உணவு தயாரிக்கப்படுகிறது.

உளுத்தம் பருப்பை, ராஜ்மாவுடன் சேர்த்து ஒரு நாள் இரவு முழுக்க ஊற வைத்து அதனை சமைக்கும் முன்பு 4 அல்லது 5 முறை கழுவி விடுவோம். அதனுடன் வெண்ணைய், க்ரீம், கரம் மசாலா, தக்காளிச் சாறு, கசூரி மேதி ஆகியவை சேர்த்து குறைந்த தீயில் 6 அல்லது 8 மணி நேரம் வேக வைத்து தயாரிக்கப்படுகிறதாம் இந்த டால் ரெய்சினா.

இது குறித்து மற்றொரு சமையல் நிபுணர் கூறுகையில், நாங்கள் தயாரித்த உணவை உலக நாட்டுத் தலைவர்களுக்கு பரிமாறுவது என்பது மிகவும் கௌரவத்துக்குரிய விஷயமாகும். எங்கள் சமையலறையில் அவ்வப்போது புதுபுது உணவு வகைகளைத் தயாரிப்பது வழக்கம். அதுபோலவே இந்த டால் ரெய்சினாவும் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார்கள்.

மேலும், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாக்களிலேயே மோடி பதவியேற்பு விழாதான் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்வாக அமையும் என்று செய்தித் தொடர்பு செயலாளர் அஷோக் மாலிக் கூறியுள்ளார்.

இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ள பதவியேற்பு  விழாவில் மிக முக்கியப் பிரமுகர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் என ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 8,000 பேர் பங்கேற்கிறார்கள்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக வியாழக்கிழமை பதவியேற்க இருக்கிறார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்க இருக்கின்றனர். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்க இருக்கிறார்.

இம்ரானுக்கு அழைப்பில்லை
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
கடந்த 2014-இல் முதல் முறையாக பிரதமராக மோடி பதவியேற்றபோது, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். இருப்பினும், கடந்த 2016-இல் பதான்கோட் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இரு தரப்பு உறவு பின்னடைவைச் சந்தித்தது.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் கடந்த ஆண்டு பதவியேற்ற நிலையில், கடந்த பிப்ரவரியில் நிகழ்ந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்திய விமானப் படை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை ஆகிய சம்பவங்கள், இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகப்படுத்தின.

இந்தச் சூழலில், இந்தியாவின் பிரதமராக மீண்டும் தேர்வான பிரதமர் மோடியை, தொலைபேசியில் தொடர்புகொண்டு இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, நமது பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்வதற்கு, பயங்கரவாதம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்று இம்ரானிடம் மோடி வலியுறுத்தினார். 

இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com