மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு: டிசம்பர் 1-இல் பதவியேற்பு!

மகாராஷ்டிர முதல்வராகவும், கூட்டணி தலைவராகவும் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் எம்எல்ஏ-க்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு: டிசம்பர் 1-இல் பதவியேற்பு!


மகாராஷ்டிர முதல்வராகவும், கூட்டணி தலைவராகவும் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் எம்எல்ஏ-க்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியை முறையே தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் இன்று (செவ்வாய்கிழமை) ராஜிநாமா செய்தனர். இதன்மூலம், சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவுள்ளன. இந்தக் கூட்டணியின் சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் டிரைடெண்ட் ஹோட்டலில் கூட்டு ஆலோசனையில் ஈடுபட்டனர். மூன்று கட்சிகளின் தலைவர்கள் வருவதற்கு முன் அக்கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் ஹோட்டலுக்கு வந்தடைந்தனர்.

இதையடுத்து, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மனைவி ராஷ்மி தாக்கரே, ஆதித்ய தாக்கரே, தேஜஸ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் அடுத்தடுத்து ஹோட்டலுக்கு வந்தடைந்தனர்.

இதையடுத்து, சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் -  காங்கிரஸ் கூட்ணி அமைப்பது குறித்த தீர்மானத்தை முன்மொழிந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிதின் ரௌத் ஆகியோர் அதை வழிமொழிந்தனர். இதன்பிறகு, அனைத்து எம்எல்ஏ-க்களாலும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவசேனை தலைவர் அனில் தேசாய் தெரிவிக்கையில், சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணிக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜெயந்த் பாட்டீல், உத்தவ் தாக்கரே இந்தக் கூட்டணியை முதல்வராக இருந்து வழிநடத்த வேண்டும் என அனைவரும் விரும்புவதாகத் தெரிவித்தார்.

இதன்மூலம், உத்தவ் தாக்கரேவை முதல்வராக முன்மொழிந்த ஜெயந்த் பாட்டீல் தீர்மானத்துக்கு காங்கிரஸ் கட்சியின் பாலாசாகேப் தோரத் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து, கூட்டணியின் தலைவராகவும், மாநிலத்தின் முதல்வராகவும் உத்தவ் தாக்கரேவை முன்மொழிந்த தீர்மானத்தை அனைத்து எம்எல்ஏ-க்களும் ஒருமனதாக நிறைவேற்றினர்.

தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முதல்வராகிறார் உத்தவ்!

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உத்தவ் தாக்கரேவுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதன்பிறகு பேசிய சரத் பவார், "கூட்டணியின் பிரதிநிதிகளாக 3 பேர் இன்று ஆளுநரைச் சந்திக்கவுள்ளனர். இதையடுத்து, மும்பை சிவாஜி பூங்காவில் டிசம்பர் 1-ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com