/

கரோனா பாதித்த 250 இந்தியர்கள் ஈரானில் உள்ளனர்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

கரோனா பாதித்த 250 இந்தியர்கள் ஈரானில் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2020, 9:54 am

PTI

புது தில்லி: கரோனா பாதித்த 250 இந்தியர்கள் ஈரானில் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஈரானில் இருந்து ஏற்கனவே 500 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்ட நிலையில், கரோனா பாதித்த 250 பேரை அழைத்து வர இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஈரானில் சிக்கியிருக்கும் 800-க்கும் மேற்பட்ட இந்தியர்களை தாயகம் அழைத்து வருமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்து, அவர்களை இந்தியா அழைத்து வருவதற்கான சாத்தியக் கூறுகளை இந்திய தூதரகம் ஆராய அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மத்திய அரசு தரப்பில், ஈரானில் இருக்கும் 250 இந்தியர்களிடமும் இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது. நிலைமைகள் சீரமையும் போது உடனடியாக அவர்கள் இந்தியா அழைத்துவரப்படுவார்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இனி இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்தில் இருக்கும். இந்த விஷயத்தில் வேறு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.