பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை: 'ஸூம்' செயலி நிறுவனம் தகவல்

பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக 'ஸூம்' செயலி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை: 'ஸூம்' செயலி நிறுவனம் தகவல்

'ஸூம்' செயலியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழ்நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் பலர் வீட்டிலிருந்தே தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் பல நிறுவனங்கள் 'ஸூம்' செயலி மூலமாக காணொளி கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து இதனை எளிதாகப் பயன்படுத்த முடியும் என்பதால் சமீபத்தில் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒரு சில அரசு அலுவலகத்தில் கூட இந்த செயலி பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது. 

இந்தநிலையில் செயலியைப் பயன்படுத்தி 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்னதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, 'ஸூம்' செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் அதில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இதன் தொடர்ச்சியாக, செயலியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக 'ஸூம்' செயலி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது, ஒருவரது கணக்கில் உள்ள தகவல்கள், மற்றவருடன் கலந்துரையாடலில் பகிரப்படும் தகவல்களை ஹேக் செய்யமுடியாத வண்ணம் பாதுகாப்பு அம்சங்களை (end-to-end encryption) மேம்படுத்துவது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

'ஸூம்' செயலி குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தும் தற்போது பயனர்களால் அது பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com