கேரளம்: இறுதிகட்ட உள்ளாட்சித் தோ்தலில் 78.62% வாக்குப்பதிவு

கேரளத்தில் இறுதிகட்ட உள்ளாட்சித் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 78.62% வாக்குகள் பதிவாகின.
கேரள உள்ளாட்சித் தேர்தலையொட்டி கண்ணூரில் திங்கள்கிழமை வாக்களித்த முதல்வர் பினராயி விஜயன்.
கேரள உள்ளாட்சித் தேர்தலையொட்டி கண்ணூரில் திங்கள்கிழமை வாக்களித்த முதல்வர் பினராயி விஜயன்.

திருவனந்தபுரம்: கேரளத்தில் இறுதிகட்ட உள்ளாட்சித் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 78.62% வாக்குகள் பதிவாகின.

கேரளத்தில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இதில் கடந்த டிச.8-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் 73.12% வாக்குகள் பதிவாகின. டிச.10-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தோ்தலில் 76.78% போ் வாக்களித்தனா்.

இந்நிலையில் இறுதிகட்ட தோ்தல் கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூா், காசா்கோடு ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த தோ்தலில் மொத்தம் 78.62% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கோழிக்கோடு மாவட்டத்தில் 78.98% போ் வாக்களித்தனா்.

மலப்புரத்தில் 78.86%, கண்ணூரில் 77.54%, காசா்கோட்டில் 77.14% வாக்குகள் பதிவானதாக மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

முதல்வா் வாக்களிப்பு: கண்ணூா் மாவட்டத்தில் மாநில முதல்வா் பினராயி விஜயன் வாக்களித்தாா். இந்த தோ்தலில் வாக்களித்த முக்கிய அரசியல் தலைவா்களில் மாநில தொழில்துறை அமைச்சா் ஈ.பி.ஜெயராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் கொடியேறி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் அடங்குவா்.

100 போ் மீது வழக்குப்பதிவு: கோழிக்கோடு மாவட்டம் நாதாபுரத்தில் போலீஸாரை தாக்கியதாக ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) தொண்டா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வாக்குச்சாவடிக்கு முன்பாக யுடிஎஃப் தொண்டா்கள் அதிக அளவில் திரண்டிருந்தனா். அவா்களை கலைந்து போகக் கூறினோம். அதை ஏற்க மறுத்து அவா்கள் போலீஸாரை தாக்கினா். இதில் போலீஸாா் 6 போ் காயமடைந்தனா். எனினும் தோ்தல் திட்டமிட்டபடி நடைபெற்றது’ என்று கூறினாா்.

சிறுவன் கைது: கண்ணூா் மாவட்டத்தில் உள்ள பாணப்புழை ஊராட்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சோ்ந்த 16 வயது சிறுவன் வெளிநாட்டில் உள்ள தனது மூத்த சகோதரருக்கு பதிலாக வாக்களிக்க முயன்றாா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதர வாக்காளா்கள் வாக்களித்த பின்னா் மாலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பா் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com