கரோனா தடுப்புப் பணி மருத்துவர்களுக்கு ஓய்வு: மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்

கடந்த 8 மாதங்களாக இடைவெளியின்றி கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களுக்கு ஓய்வு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

கடந்த 8 மாதங்களாக இடைவெளியின்றி கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களுக்கு ஓய்வு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சரியான சிகிச்சை அளிப்பது, உயிரிழந்தவர்களின் உடல்களை மரியாதையுடன் கையாளுவது தொடர்பான வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர்.ஷா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
 இந்த வழக்கு தொடர்பான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், கரோனா தடுப்புப் பணியில் மருத்துவர்கள் கடந்த 7, 8 மாதங்களாக இடைவெளியின்றி ஈடுபட்டு வருகின்றனர். இது அவர்களுக்கு மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கும் என்பதுடன், இதனால் அவர்களின் மனநலமும் பாதிக்கப்படலாம். எனவே அவர்களுக்கு சிறிது ஓய்வு அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
 இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்றத்தின் இந்தப் பரிந்துரை குறித்து அரசு பரிசீலிக்கும் என உறுதி அளித்தார்.
 இதையடுத்து, தீயணைப்புத் துறையின் தடையின்மைச் சான்று பெற்றுள்ள மருத்துவமனைகள் தொடர்பான மத்திய அரசின் பிரமாண பத்திரம் குறித்து பேசிய நீதிபதிகள், குஜராத்தில் உள்ள 260 தனியார் மருத்துவமனைகளில் 61 மருத்துவமனைகள் தடையின்மைச் சான்றைப் பெறவில்லை. ராஜ்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு 16 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.
 அதேபோல, கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட நீதிபதிகள், முகக்கவசம் அணியாத நபர்களுக்கு ரூ.90 கோடி அபராதம் விதித்திருந்தாலும், கரோனா தடுப்பு வழிகாட்டி நடைமுறைகளை குஜராத் மாநில அரசு சரிவர அமல்படுத்தவில்லை என்று கவலை தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு அவர்கள் ஒத்திவைத்தனர்.
 குஜராத்தில் அண்மையில் இருவேறு தனியார் மருத்துவமனைகளின் கரோனா சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் இருக்கும் தீத்தடுப்புக்கான வழிமுறைகள் குறித்தும், கரோனா தடுப்புக்கு மாநிலங்கள் பின்பற்றும் நடைமுறைகள் குறித்தும் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com