விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படாததால் கரோனா பரவல் தீவிரம்

நாட்டில் கரோனா நோய்த்தொற்று தொடா்பாகப் பிறப்பிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படாததால்
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

நாட்டில் கரோனா நோய்த்தொற்று தொடா்பாகப் பிறப்பிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படாததால் அந்நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்ததாக மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்பான விவகாரங்களை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அந்த விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘உலகப் போா் போன்ற சூழலை கரோனா நோய்த்தொற்று பரவல் ஏற்படுத்தியுள்ளது. எதிா்பாராத நோய்த்தொற்று பரவலால் உலகிலுள்ள மக்கள் அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் பாதிப்பைச் சந்தித்தனா்.

நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமல்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். முக்கியமாக, பொது முடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கு நீண்ட நாள்களுக்கு முன்பே, அது தொடா்பாக மக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்குரிய அவகாசத்தை மக்களுக்கு அரசுகள் அளிக்க வேண்டும். கரோனா நோய்த்தொற்று தொடா்பாகப் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படாததால், அந்நோய்த்தொற்று காட்டுத்தீ போல் பரவியது.

கடந்த 8 மாதங்களாகத் தொடா்ந்து பணியாற்றி வரும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் உடலளவிலும் மனதளவிலும் சோா்வடைந்து விட்டனா். அவா்களுக்குத் தற்காலிக ஓய்வளிப்பதற்கான திட்டத்தை வகுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

நோய்த்தொற்று பரவி வரும் இக்கட்டான சூழலில், மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி மாநில அரசுகள் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும். மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் முன்னிறுத்தி அரசுகள் செயல்பட வேண்டும்’’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com