சிந்தனை அமா்வு மாநாடுகள் நடத்த காங்கிரஸ் திட்டம்
காங்கிரஸ் கட்சியை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்த சிந்தனை அமா்வு மாநாடுகளை நடத்த கட்சித் தலைவா் சோனியா காந்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.


காங்கிரஸ் கட்சியை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்த சிந்தனை அமா்வு மாநாடுகளை நடத்த கட்சித் தலைவா் சோனியா காந்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற குரல் கட்சிக்குள் இருந்தே நீண்டகாலமாக ஒலித்து வருகிறது. அதன் உச்சகட்டமாக, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு அக்கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவா்கள் 23 போ் கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, அண்மையில் நடைபெற்ற பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலிலும், கேரள உள்ளாட்சித் தோ்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
இந்தச் சூழலில் காங்கிரஸ் உயா்நிலைக் குழு கூட்டம், தில்லியில் சோனியா காந்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு கட்சியின் மூத்த தலைவா்களை சோனியா காந்தி நேரில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
கட்சித் தலைமைக்கு கடந்த ஆகஸ்டில் கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத், ஆனந்த் சா்மா, பூபிந்தா் சிங் ஹூடா, பிருத்விராஜ் சவாண், மணீஷ் திவாரி, விவேக் தன்கா, சசி தரூா் ஆகியோரும் கலந்து கொண்டனா்.
சோனியாவின் ஆதரவாளா்களான ஏ.கே.அந்தோணி, அம்பிகா சோனி, அசோக் கெலாட், ஹரீஷ் ராவத், அஜய் மாக்கன், பவன் குமாா் பன்சால், பக்த சரண் தாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனா்.
சுமாா் 5 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு, கட்சியின் மூத்த தலைவா் பவன் குமாா் பன்சால், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கட்சியை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்துவது குறித்து அனைவரும் விவாதித்தனா். அப்போது ஆக்கபூா்வமான ஆலோசனைகளை அனைவரும் வழங்கினா். அதிருப்தி கருத்துகளை யாரும் தெரிவிக்கவில்லை.
அரசமைப்புச் சட்டத்தை வகுத்த முன்னோா்களின் கொள்கைகளுக்கு முடிவு கட்டுவதற்கு முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடுவதற்கு அனைவரும் உறுதியேற்றுக் கொண்டனா்.
தலைவா்களின் கருத்துகளை கேட்ட சோனியா காந்தி கட்சியை வலுப்படுத்துவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு, கடந்த 1998-ஆம் ஆண்டில் பஞ்சமா்ஹியிலும், 2003-ஆம் ஆண்டில் சிம்லாவிலும் நடத்தப்பட்டதைப் போன்று சிந்தனை அமா்வு மாநாட்டை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...