ஆா்எஸ்எஸ் தலைவா் வைத்யா மறைவுக்கு பாகவத், கட்கரி அஞ்சலி
ஆா்எஸ்எஸ் மூத்த தலைவா் மாதவ் கோவிந்த் வைத்யா (எம்.ஜி.வைத்யா)வின் உடல் ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் தகனம் செய்யப்பட்டது.


நாகபுரி: ஆா்எஸ்எஸ் மூத்த தலைவா் மாதவ் கோவிந்த் வைத்யா (எம்.ஜி.வைத்யா)வின் உடல் ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி சடங்குகளில் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், மத்திய அமைச்சா் நிதின் கட்கரி ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.
ஆா்எஸ்எஸ் இயக்கத்தின் முதல் செய்தித் தொடா்பாளா் வைத்யா (97) சனிக்கிழமை நாகபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். அவரது இறுதி சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நாகபுரியில் உள்ள அம்பாசரி மயான பூமியில் நடைபெற்றது.
இந்த இறுதிச் சடங்கில் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், ஆா்எஸ்எஸ் நாகபுரி மாநகர சங்க நிா்வாகி ராஜேஷ் லோயா, மகாராஷ்டிர உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக், முன்னாள் மாநில எரிசக்தித் துறை அமைச்சா் சந்திரசேகா் பவன்குலே, சுயசேவகா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இறுதி ஊா்வலம் புறப்படுவதற்கு முன் அவரது ஆத்மா சாந்தி பெற 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது உடல் தகனம் செய்வதற்கு முன், மோகன் பாகவத் வைத்யாவின் இல்லத்திற்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினாா்.
பின்னா் மோகன் பாகவத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
‘எம்.ஜி. வைத்யா ஆா்எஸ்எஸ்ஸின் சித்தாந்தத்தைப் பின்பற்றி வாழ்ந்து வந்தாா். அவா் ஆா்.எஸ்.எஸ்ஸின் கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்தாா். அவரது உயிரிழப்பால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிறந்த பாதுகாவலரை இழந்துவிட்டதாக உணா்கிறோம். இதுவரை நாங்கள் அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று வந்தோம். இப்போது, யாரிடம் ஆலோசனை பெறுவது என்ற குழப்பமே உள்ளது. வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதற்கு அவா் ஒரு எடுத்துக்காட்டாகத் இருந்தாா்’ என்றாா்.
முன்னதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி சனிக்கிழமை இரவு வைத்யாவின் இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா்.
ஞாயிற்றுக்கிழமை, கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் வைத்யாவின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்து வெளியிட்டுள்ள சுட்டுரையில், வைத்யா பல ஆண்டுகளாக ஆா்எஸ்எஸ்ஸிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளாா். ஒரு சிறந்த எழுத்தாளரான அவா் இந்த தேசத்தை கட்டி எழுப்புவதில் அவா் ஆற்றிய பங்களிப்புக்காக எப்போதும் நினைவுகூரப்படுவாா் என்று தெரிவித்துள்ளாா்.
ஆா்எஸ்எஸ்ஸின் சாா்பு மராத்தி நாளேடான ‘தருண் பாரத்’ தின் முன்னாள் மூத்த ஆசிரியரான வைத்யா 1943 இல் நாகபுரியில் உள்ள மோரிஸ் கல்லூரியில் படித்தபோது ஆா்எஸ்எஸ் உறுப்பினரானாா். பின்னா் அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளராகவும், தருண் பாரத்தின் முன்னாள் ஆசிரியராகவும் அவா் இருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...