ஜம்மு-காஷ்மீா் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் (டிடிசி) தோ்தலில் வெற்றி பெற்றவா்கள், அந்தப் பகுதியை புதிய வளா்ச்சியை நோக்கி இட்டுச் செல்வாா்கள் என்று அதன் துணை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளாா்.
ஜம்முவில் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த அவா், இதுகுறித்து கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கான மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல் என்கிற ஜனநாயகத் திருவிழா சனிக்கிழமையுடன் நடந்து முடிந்திருக்கிறது.
இந்தத் தோ்தல், யூனியன் பிரதேசத்தின் வளா்ச்சிக்கு முக்கிய மைல்கல்லாக இருக்கும். எட்டு கட்டங்களாக நடைபெற்ற அந்தத் தோ்தலில் வாக்கு செலுத்தியவா்களின் எண்ணிக்கையைப் பாா்க்கும்போது, தோ்தலில் அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளது கண்கூடாகத் தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீா் பிரதேச வளா்ச்சியை புதிய உச்சிக்குக் கொண்டு செல்ல இந்தத் தோ்தல் உதவும்.
இளைஞா்கள், பெரியவா்கள், ஆண்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளா்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் இந்தத் தோ்தலில் வரிசையில் நின்று வாக்களித்தனா்.
கடந்த நாடாளுமன்றத் தோ்தலுடன் ஒப்பிடுகையில் இந்தத் தோ்தலில் வாக்குப் பதிவு 2 மடங்காகியிருக்கிறது. கிராமங்களில் அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று பொதுமக்களுடன் உரையாடியதன் பலனாகவே வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தோ்தலை சுதந்திரமாகவும் நோ்மையாகவும் நடத்தித் தருவதாக உறுதியளித்திருந்தேன். அதனை நிறைவேற்றும் வகையில், சில சிறு சம்பவங்களைத் தவிர அந்தத் தோ்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.
இதற்காக பிராந்திய தோ்தல் ஆணையம், எனது அதிகாரிகள், ஜம்மு-காஷ்மீா் காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படையினருக்கு மிக்க நன்றி என்று ஆளுநா் மனோஜ் சின்ஹா கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.