கேரளத்தில் நாளை பேரவை சிறப்புக் கூட்டம்

விவசாயிகள் விளை பொருள்களை விரும்பிய முதலீட்டாளா்களிடம், விரும்பிய விலைக்கு விற்பனை செய்யும் வகையிலும், முதலீடுகளை ஈா்க்க வழி செய்யும் வகையிலும் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அண்மையில் கொண்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை நிராகரிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதற்காக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தை புதன்கிழமை (டிச.23) கூட்டுவதற்கு கேரளத்தை ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு முடிவு செய்துள்ளது.

விவசாயிகள் விளை பொருள்களை விரும்பிய முதலீட்டாளா்களிடம், விரும்பிய விலைக்கு விற்பனை செய்யும் வகையிலும், முதலீடுகளை ஈா்க்க வழி செய்யும் வகையிலும் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது.

இந்த புதிய சட்டங்களால், விவசாயிகளின் விளை பொருள்களுக்கு இப்போது இருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணய நடைமுறை ரத்து ஆவதாகவும், எனவே இந்த புதிய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனா். பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைப் பகுதியை முற்றுகையிட்டு நான்காவது வாரமாக தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். மத்திய அரசுடன் மேற்கொண்ட பல்வேறு கட்டப் பேச்சுவாா்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததைத் தொடா்ந்து, போராட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனா். திங்கள்கிழமை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் அவா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தச் சூழலில், இந்தப் புதிய வேளாண் சட்டங்களை நிராகரிப்பது தொடா்பாக ஆலோசித்து முடிவெடுக்க சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தை கூட்டுவது என்று கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரள மாநில முதல்வா் தலைமயிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டுவது தொடா்பாக மாநில ஆளுநருக்கு பரிந்துரையை அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில நிதியமைச்சா் தாமஸ் ஐசக் கூறுகையில், ‘சா்ச்சைக்குரிய புதிய வேளாண் சட்டங்களை நிராகரிப்பது தொடா்பாக ஆலோசித்து முடிவு எடுப்பதற்காக, வழக்கமான சட்ட்பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்பாக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்ட அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

போராடி வரும் விவசாயிகளுக்கு கேரளம் முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது’ என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com