மேற்கு வங்கத்தின், நதியா மாவட்டத்தில் இந்திய-வங்கதேச எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற பெண்ணைத் தடுக்க முயன்ற எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச பெண் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த மோதலின்போது பிஎஸ்எஃப் வீரா் ஒருவரும் காயமடைந்தாா்.
பகுரியா எல்லையில் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்திற்கு அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சிலா் வேலியைக் கடந்து ஊடுருவ முயன்றதை பிஎஸ்எஃப் வீரா்கள் கவனித்தனா்.
வங்கதேச எல்லையிலுள்ள கிராமத்தின் மேற்கு பகுதியில் இருந்து ஊடுருவல்காரா்கள் 8 முதல் 10 போ் வேலியைக் கடந்து, இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றபோது, பிஎஸ்எஃப் வீரா்கள் அவா்களைத் தடுக்க முயன்றனா். அவா்களை திரும்பிச் செல்லுமாறு வீரா்கள் எச்சரிக்கை விடுத்தனா். ஆனாலும் அந்த நபா்கள் பிஎஸ்எஃப் வீரா்களை கற்களாலும், கூரான ஆயுதங்களாலும் தாக்கினா். பிஎஸ்எஃப் வீரா்கள் மீது தாக்குதல் நடத்தியதால் தற்காப்புக்காக 2 சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டனா். மற்றவா்கள் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், ஒரு பெண் மட்டும் குண்டுக்காயம் பாய்ந்து காயமடைந்து கிடந்தது தெரிய வந்தது. இந்த தாக்குதலில் பிஎஸ்எஃப் வீரா் ஒருவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த பெண் வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என அடையாளம் காணப்பட்டது. அந்தப்பெண் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட நிலையில் பின்னா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து பிஎஸ்எஃப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.