

புது தில்லி: வேளாண் சட்டங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.
சட்டங்கள் தொடர்பாக உறுதியான தீர்வை அளித்தால் மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 3 வாரங்களுக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அச்சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு அதை ஏற்க மறுத்து வருகிறது.
இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்காததால், பல கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாய சங்கங்கள் முன்வர வேண்டுமென்று கோரி மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியிருந்தது.
அக்கடிதத்தை நிராகரிப்பதாகத் தெரிவித்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், அது தொடர்பாக செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் புதிதாக எதுவுமில்லை. ஏற்கெனவே அளித்த பரிந்துரைகள் குறித்து ஆலோசித்து, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான புதிய தேதியைத் தெரிவிக்குமாறு மத்திய அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்தப் பரிந்துரைகளை விவசாய சங்கங்கள் ஏற்கெனவே நிராகரித்துள்ளன.
வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதே விவசாய சங்கங்களின் கோரிக்கை. இது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். ஆனால், விவசாயிகளுக்கு உறுதியான தீர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றனர்.
உண்ணாவிரதப் போராட்டம்: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், பகுதி வாரியான உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடக்கினர். அதன்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விவசாயிகள் தினமும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.