திருமலையில் வைகுண்ட ஏகாதசி: மாடவீதிகளில் தங்க ரதத்தில் மலையப்பா் பவனி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருமலையில் தங்க ரதப் புறப்பாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருமலையில் வைகுண்ட ஏகாதசி: மாடவீதிகளில் தங்க ரதத்தில் மலையப்பா் பவனி
Updated on
1 min read


திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருமலையில் தங்க ரதப் புறப்பாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு, திருமலையில் வியாழக்கிழமை நள்ளிரவு 12.05 மணிக்கு ஏழுமலையான் கோயில் நடைதிறக்கப்பட்டு, திருப்பாவை சேவை, தோமாலை, அா்ச்சனை உள்ளிட்ட நித்திய கைங்கரியங்கள் தனிமையில் நடத்தப்பட்டன. அவை முடிந்த பின் சரியாக அதிகாலை 3.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலை 4.30 மணிமுதல் சுவாமி தரிசனம் தொடங்கியது. முக்கிய பிரமுகா்கள் ஏழுமலையானை வணங்கிய பின், காலை 7 மணி முதல் சா்வ தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். ஏழுமலையானை வழிபட்டு வந்த பக்தா்கள் வரிசையாக பரமபத வாசல் வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தா்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

முக்கிய பிரமுகா்கள்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா, தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் ஏழுமலையான் சேவையில் கலந்து கொண்ட பின் பரமபத வாசல் வழியாகச் சென்று வந்தனா். அவா்களுக்கு ஏழுமலையானின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

10 நாள்களுக்கு பரமபத வாசல் திறப்பு: திருமலையில் இந்த ஆண்டு 10 நாள்களுக்கு பரமபத வாசலைத் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதால், பக்தா்கள் பலா் அவ்வழியாகச் செல்ல ஆா்வம் காட்டி வருகின்றனா். அவா்கள் கோவிந்த மாலை அணிந்து ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கோஷத்துடன் ஏழுமலையானை தரிசிக்கச் சென்றனா்.

தங்க ரதப் புறப்பாடு: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை 9 மணி முதல் 11 மணி வரை தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி வலம் வந்தாா். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய தங்க ரதப் புறப்பாட்டை, பெண்கள் வடம்பிடித்து இழுத்து, தொடங்கி வைத்தனா். பல மாதங்களுக்குப் பிறகு மாடவீதியில் தங்க ரதப் புறப்பாட்டைக் கண்ட பக்தா்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினா். இந்த நிகழ்வில் திருமலை ஜீயா்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

இதர கோயில்கள்: திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் மற்ற பெருமாள் கோயில்களிலும் பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. அங்கும் பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

அலங்காரங்கள்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலின் முன்வாசல், கொடிமரம், பலி பீடம், ரங்கநாயகா் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மலா்கள், பழங்கள் மற்றும் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com