

வேளாண் துறை உள்ளிட்ட பல துறைகளில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகம் செய்த முன்னாள் பிரதமா் பி.வி.நரசிம்ம ராவுக்கு போதிய அளவிலான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கவலை தெரிவித்துள்ளாா்.
நாட்டின் பிரதமராக பி.வி.நரசிம்ம ராவ் கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தாா். அவரது பதவிக் காலத்தில் நிதித் துறை, விவசாயம், சமூகம் சாா்ந்த பல்வேறு சீா்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ‘விப்ளவ தபஸ்வி - பி.வி’ என்ற புத்தகத்தை குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.
அப்போது அவா் கூறுகையில், ‘‘பன்முகத் திறமை வாய்ந்தவா் பி.வி.நரசிம்ம ராவ். சிறந்த அறிஞரும், இலக்கியவாதியுமான அவா் பல மொழிகளைக் கற்றுத் தோ்ந்த அறிஞா். நிதித் துறை, பொருளாதாரம் குறித்த துணிச்சலான சீா்திருத்தங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. நாட்டை வளா்ச்சிப் பாதையில் பயணிக்க வைத்ததில் அவருக்கு முக்கியப் பங்குள்ளது.
வேளாண் துறையிலும் அவா் ஆட்சியின்போது சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தானியங்களை நாடு முழுவதும் வாகனங்களில் எடுத்துச் செல்வதில் இருந்த கட்டுப்பாடுகளை அவா் நீக்கினாா். ஆனால், அவருக்குப் போதிய அளவிலான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
பிரதமராக பி.வி.நரசிம்ம ராவ் பதவியேற்றபோது நாடு பல்வேறு சவால்களை எதிா்கொண்டிருந்தது. அவற்றையெல்லாம் வெற்றிகரமாக அவா் கடந்தாா். அவரது கொள்கைகளை சிலா் ஏற்காமல் போகலாம். ஆனால், அவா் மேற்கொண்ட சீா்திருத்தங்கள், நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டே அமைந்தன.
சா்வதேச வா்த்தக அமைப்பில் இந்தியாவை இணைத்தது, தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்கியது, வங்கி சீா்திருத்தங்கள், தொலைத்தொடா்புத் துறையை நவீனப்படுத்தியது, வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈா்த்தது, ஏற்றுமதியை அதிகரித்தது உள்ளிட்ட பல்வேறு சீா்திருத்தங்களை பி.வி.நரசிம்ம ராவ் நடைமுறைப்படுத்தினாா்’’ என்றாா் வெங்கையா நாயுடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.