
லக்னௌ: உத்தரப் பிரதேசத்தின் தலைமைச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வெண்கலச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் திறந்து வைத்தார்.
இந்த இடம், தற்போது பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்ஃபி எடுக்கும் இடமாக மாறியுள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் திருவுருவச்சிலை உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலகமான லோக் பவன் நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ் குமார் பண்டிட் என்பவரால் ரூ.89.6 லட்ச மதிப்பில் இந்தச் சிலை செதுக்கப்பட்டுள்ளது. வாஜ்பாயின் இந்தச் சிலை அவரது பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்தச் சிலை நிறுவப்பட்டிருப்பதன் மூலமாக மாநிலத்தின் மிக உயரமான சிலை இதுவென்ற பெருமையைப் பெற்றது.
பொதுமக்கள் பார்வையிட வசதியாக, லோக் பவன் நுழைவு வாயில்கள் ஞாயிறு தோறும் திறந்து வைத்து, வாஜ்பாயின் சிலையை பொதுமக்கள் பார்த்துச் செல்ல வசதி ஏற்படுத்தியுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
ஞாயிறுதோறும் ஏராளமானோர் வாஜ்பாய் சிலையைப் பார்வையிட்டு, 25 அடி உயரமுள்ள சிலை முன்பு நின்று செல்ஃபி எடுத்துச் செல்கிறார்கள்.