'கொடூரத்தின் உச்சம்' - அன்னாசிப் பழத்துக்குள் வெடிமருந்து; வலியால் துடிதுடித்து உயிரிழந்த கர்ப்பிணி யானை!

அன்னாசிப் பழத்துக்குள் வெடிமருந்தை நிரப்பி கொடுத்ததால், வாய் வெடித்து கர்ப்பிணி யானை ஒன்று தண்ணீரில் நின்றபடியே உயிரிழந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
'கொடூரத்தின் உச்சம்' - அன்னாசிப் பழத்துக்குள் வெடிமருந்து; வலியால் துடிதுடித்து உயிரிழந்த கர்ப்பிணி யானை!
Published on
Updated on
2 min read

அன்னாசிப் பழத்துக்குள் வெடிமருந்தை நிரப்பி கொடுத்ததால், வாய் வெடித்து கர்ப்பிணி யானை ஒன்று தண்ணீரில் நின்றபடியே உயிரிழந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே கர்ப்பிணி யானை ஒன்று காட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்துக்கு உணவு தேடிச் சென்றது. இதனைப் பார்த்து பயந்த மக்கள், தங்களுக்கும் தங்கள் ஊருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடும் என எண்ணி, யானையை விரட்ட அன்னாசிப்பழத்துக்குள் வெடிமருந்தை நிரப்பி யானைக்கு உணவாக அளித்துள்ளனர். 

பழத்துக்குள் வெடிமருந்து இருப்பதை அறியாது பசியில் இருந்த யானை, அதனை வாங்கிச் சாப்பிட்டது. சிறிது நேரத்தில் வயிற்றுக்குள் பழம் வெடித்து தாங்க முடியாத வலியை அனுபவித்துள்ளது கர்ப்பிணி யானை. இறுதியில் அங்குள்ள நதி நீரில் நின்றபடியே தனது குட்டியுடன் உயிரை விட்டது.

இந்த கொடூர சம்பவம் குறித்து வன அதிகாரி மோகன் கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 

அவள்(கர்ப்பிணி யானை) அங்குள்ள அனைவரையும் நம்பினாள். அவள் சாப்பிட்ட அன்னாசிப்பழம் வெடித்தபோது கண்டிப்பாக அதிர்ச்சியடைந்திருப்பாள். ஏனென்றால் அவள் இன்னும் 18 முதல் 20 மாதங்களில் ஒரு குழந்தையைப்(குட்டியை) பெற்றெடுக்கப் போகிறாள். 

அவள் வாயில் வெடித்த வெடிமருந்து மிகவும் சக்தி வாய்ந்தது. அவளது வாயும், நாக்கும் மிகவும் மோசமாக காயமுற்றிருந்தன. வலியுடன் அவள் கிராமத்தை சுற்றி வந்திருக்கிறாள். ஆனால், அவள் வாயில் ஏற்பட்ட காயத்தால் எதுவும் சாப்பிடவும் முடியவில்லை.

தாங்க முடியாத கொடூர வலியிலும், அவள் கிராமத்தில் யாரையும் சிறிதளவு கூட துன்புறுத்தவில்லை. எந்த இடத்திலும் கொஞ்சம் கூட சேதம் விளைவிக்கவில்லை. ஆம், அதனால்தான் சொல்கிறேன். அவள் மிகவும் நல்லவள். 

இறுதியில் தாங்க முடியாத வலியை சமாளிக்க வெள்ளியாறு நதிநீரில் இளைப்பாறினாள். அவளது வயிற்றில் ஏற்பட்ட காயங்களில் வந்து அமரும் ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளைத் தவிர்ப்பதற்காக கூட இதைச் செய்திருக்கலாம். தனது வாயையும், தந்ததையும் நீரில் மூழ்கியபடி அவள் நின்றிருந்தாள். 

நதியில் இருந்து அவளைக் காப்பாற்ற சுரேந்திரன் மற்றும் நீலகாந்தன் எனும் இரண்டு யானைகளை அழைத்து வந்தோம். ஆனால் அவளுக்கு ஆறாவது உணர்வு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். உயிரை விடப்போகிறோம் என்று தெரிந்ததோ என்னவோ, அவள் எங்களை எதுவும் செய்ய விடவில்லை. அதனை பார்த்து எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. உடன் வந்த யானைகளும் அவளைப் பார்த்து கண்ணீர் விட்டன. 

பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு, மே 27 மாலை 4 மணியளவில் உயிரிழந்த நிலையில் அவளை மீட்டோம். ஒரு லாரியின் மூலமாக அவளை காட்டுக்குள் கொண்டு சென்று அவள் விளையாடிய நிலத்தில் படுக்க வைத்து, அவள் மீது விறகு வைத்து தகனம் செய்தோம். அவளது முகத்தில் உள்ள வலியை எங்களால் உணர முடிந்தது.  அவளுக்கு மிகுந்த மரியாதையுடன் அனைவரும் பிரியாவிடை அளித்திருக்க வேண்டும். அவள் முன் நாங்கள் தலைகுனிந்து இறுதி மரியாதை செலுத்தினோம். ஒரு மனிதனாக நான் அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று மிகவும் உருக்கமாக தனது எழுத்துகள் மூலமாக யானையின் தாங்க முடியாத வலியை, இழப்பை பதிவு செய்துள்ளார் வன அதிகாரி மோகன் கிருஷ்ணன். 

யானையின் புகைப்படங்களும், வன அதிகாரியின் இந்தப் பதிவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் அனைவரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com