லடாக்: மோடியின் பேச்சு உள்நோக்கத்தோடு திசை திருப்பப்படுகிறது- பிரதமர் அலுவலகம்

லடாக் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து உள்நோக்கத்தோடு திசைதிருப்பப்படுகிறது என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
லடாக்: மோடியின் பேச்சு உள்நோக்கத்தோடு திசை திருப்பப்படுகிறது- பிரதமர் அலுவலகம்


புது தில்லி: லடாக் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து உள்நோக்கத்தோடு திசைதிருப்பப்படுகிறது என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

லடாக் விவகாரம் குறித்து பிரதமர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசுகையில், இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை; யாரும் ஆக்கிரமிக்கவுமில்லை. எதிரிப் படைகள் நிலம், வான், கடல் என எந்த வழியாக வந்து தாக்குதல் நடத்தினாலும் அவா்களிடம் இருந்து நமது படையினா் நாட்டை பாதுகாப்பாா்கள். நம் மண்ணில் ஓா் அங்குல இடத்தைக் கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாத அளவுக்கு வலிமை மிக்க படைகள் நம்மிடம் உள்ளன என்று கூறியிருந்தார்.

இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடுமையான விமரிசனத்தை முன் வைத்திருந்தனர்.

எனவே, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15-ம் தேதி இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய கருத்துகள் குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீனப் படையினரின் ஆக்ரமிப்பு முயற்சி, இந்திய ராணுவத்தின் துணிச்சலான நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது, இந்திய ராணுவத்தின் நடவடிக்கையால், கல்வான் பள்ளத்தாக்கில் மோதலுக்குப் பின் இந்திய எல்லைப் பகுதியில் சீனா எந்த ஆக்கிரமிப்பையும் செய்யவில்லை என்றுதான் பிரதமர் கூறியிருந்தார்.

முன்னதாக, சீனா ஊடுருவவும் இல்லை, ஆக்கிரமிப்பையும் செய்யவில்லை என்றால், பிறகு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மரணம் அடைய என்னக் காரணம் என்று காங்கிரஸ் உள்பட ஏராளமான அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.

அதே சமயம், சீனா மீது எந்த தவறும் இல்லை என்பதுபோல, பிரதமர் மோடி அந்நாட்டுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும் அந்த அறிக்கையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 16வது பிகார் ரெஜிமெண்ட் படையினர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்து, சீனப் படைகளின் அத்துமீறலைத் தடுத்து, அப்பகுதியில் அமைக்கப்பட்ட கட்டமைப்புகளை தகர்த்து, ஊடுருவல் முயற்சியையும் தவிடுபொடியாக்கி, தாய்நாட்டைக் காத்துள்ளனர் 

இந்திய நிலப்பகுதியை ஆக்ரமிக்க மேற்கொண்ட முயற்சிக்கு, இந்திய ராணுவத்தின் துணிச்சலான நடவடிக்கையால் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவப் படை வீரர்கள், எல்லைப் பகுதியில் ஒரு சிறு கல்லைக் கூட அசைக்க விடாமல் நாட்டைக் காத்துள்ளனர் என்பதையே பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆனால், அனைத்து கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய உரை, வேண்டும் என்றே தவறாக திசை திருப்பப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com