கரோனாவிலிருந்து 100 % குணமடைய ஆயுர்வேத மருந்து: பதஞ்சலி அறிமுகம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து 100 சதவிகிதம் குணமடைய வைக்கும் ஆயுர்வேத மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனாவிலிருந்து 100 % குணமடைய ஆயுர்வேத மருந்து: பதஞ்சலி அறிமுகம்
Published on
Updated on
1 min read


கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து 100 சதவிகிதம் குணமடைய வைக்கும் ஆயுர்வேத மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் செய்தியாளர்களைச் சந்தித்து இன்று (செவ்வாய்க்கிழமை) பதஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவ் விளக்கமளித்தார்.

"கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான மருந்துக்காகவும், தடுப்பூசிக்காகவும் ஒட்டுமொத்த உலகமே காத்திருக்கிறது.

இந்தத் தருணத்தில் பதஞ்சலி ஆய்வக மையம் மற்றும் தேசிய மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து கூட்டு முயற்சியாக மருத்துவ ரீதியிலான சோதனை அடிப்படையிலும், ஆய்வுகள் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்ட முதல் ஆயுர்வேத மருந்தை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம்.

இந்த மருந்து 3 முதல் 7 நாள்களில் 100 சதவிகிதம் குணமடைய வைக்கிறது. 'கரோனில்' மற்றும் 'சுவாசரி' எனும் கரோனா தொற்றுக்கான மருந்துகளை நாங்கள் இன்று அறிமுகப்படுத்துகிறோம். நாங்கள் இரண்டு சோதனைகளைச் செய்துள்ளோம். முதலில்  தில்லி, அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மருத்துவ ரீதியிலாக ஆய்வு மேற்கொண்டோம். இதில் 280 நோயாளிகள் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் குணமடைந்தனர். இந்த மருந்து மூலம் கரோனா மற்றும் அதன் விளைவுகளைக் கட்டுப்படுத்த முடிந்தது. இதன் பிறகு, மிகவும் முக்கியமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

ஜெய்ப்பூரில் உள்ள தேசிய மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உதவியுடன் 95 நோயாளிகளுக்கு மருத்துவ ரீதியிலான சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மூன்றே நாள்களில் 69 சதவிகிதத்தினர் குணமடைந்தனர். அவர்களுக்கு  3 நாள்களில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 7 நாள்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தைப் பயன்படுத்த, சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடமிருந்து அனுமதி பெறுவதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார் பாபா ராம்தேவ்.

கரோனாவிலிருந்து குணப்படுத்த பதஞ்சலி கண்டுபிடித்த இந்த மருந்துக்கு இதுவரை எவ்வித மருத்துவ அமைப்பும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

உலக சுகாதார அமைப்பு அண்மையில் தெரிவிக்கையில், "கரோனா தொற்றுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இதுவரை எந்தவொரு மருந்தும் நோய்த் தொற்றைக் குணப்படுத்தும் என்பதற்கான சான்றுகள் இல்லை" என்று தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com