/

மோடி ஆட்சி 2.0 : மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஓராண்டு!

மக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க வைத்துக் கொண்ட  நாள் இன்று.

News image
Updated On :23 மே 2020, 12:15 pm

DIN

மக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க வைத்துக் கொண்ட நாள் இன்று.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்து வெற்றிக் கொடி நாட்டி இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி (68) 2ஆவது முறையாக மே 30-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். 

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிபெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதன் மூலம், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2 ஆவது முறையாகப் பதவியேற்கும் வரலாற்று பெருமையை ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்கு அடுத்து நரேந்திர மோடி பெற்றார்.

இத்தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தன.

542 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஆண்டு இதே மே 23-ம் தேதி வியாழக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

வெற்றித் திருநாளில் மோடி சொன்னவை: 

மக்களவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக அமோக வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவுக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது" என்று கூறியிருந்தார்.

எனது வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், என் உடலில் ஒவ்வொரு அங்கத்தையும் இந்த நாட்டு மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதை அடுத்து தில்லியில் உள்ள பாஜக தேசிய தலைமையகத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதும், மக்கள் அனைவரும் மோடி, மோடி என்று முழக்கமிடுகிறார்கள். இது, எனக்கு கிடைத்த வெற்றி அல்ல. நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்த வெற்றி. மக்களின் எதிர்பார்ப்புக்கும், நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி. 21-ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை அனைத்து பாஜக எம்.பி.க்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்களும் பணிவுடன் மக்களுக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

இந்த தேர்தலில் பாரதத் தாய்க்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் பாடுபட்டுள்ளனர்.  மக்களவைத் தேர்தலில் பாஜக அபாரமாக வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு அரசியல் பண்டிதர்கள் தங்களுடைய சிந்தனையை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.

Story image

நாட்டின் இப்போது இரண்டு ஜாதிகள்தான் உள்ளன. ஒன்று ஏழை ஜாதி. மற்றொன்று, ஏழ்மை நிலையை அழிக்க விரும்பும் ஜாதி.

நாட்டின் எதிர்காலத்தை என் கைகளில் ஒப்படைத்திருக்கிறீர்கள். எனக்கு மிகப்பெரிய பொறுப்பை அளித்திருக்கிறீர்கள். எந்தவொரு காரியத்தையும் எனது சுயநலத்துக்காக செய்ய மாட்டேன். பணிகளைச் செய்யும்போது அதில் சில தவறுகள் நேரிடலாம். ஆனால், தீய நோக்கத்துடன் எந்தவொரு காரியத்தையும் நான் செய்ய மாட்டேன். என் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், எனது உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

ஒரு காலத்தில் பாஜகவுக்கு 2 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இருந்தாலும், நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. எங்கள் கொள்கைகளை மறந்துவிடவில்லை; எங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுத்ததும் இல்லை. சோர்வடைந்து பாதியில் நின்றுவிடவுமில்லை. 2 எம்.பி.க்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக, பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அதிக அளவில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்திருப்பது இதுவே முதல் முறை. அதுவும் 40-42 டிகிரி வெயிலில். இதற்காக, 130 கோடி மக்களுக்கும் தலை வணங்க கடமைப்பட்டுள்ளேன். இதுவரை இல்லாத அளவில் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்காக, இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று பேசியிருந்தார் மோடி.

மீண்டும் பதவியேற்ற மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு, இந்த ஓராண்டில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. மக்கள் மத்தியில் அரசு பற்றித் திருப்தியும் அதிருப்தியும் கலந்துகிடக்கிறது. சிறந்த பாராட்டுகள் ஒரு தரப்பில், கடும் விமர்சனம் இன்னொரு தரப்பில் என நடந்துகொண்டிருக்கிறது ஆட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.