

திருவனந்தபுரம்: உலகம் முழுவதும் மிகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது கரோனா தொற்று. அதோடு, சமுதாயத்தின் இருண்ட பக்கங்களை புரட்டிப் போட்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தும் இருக்கிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை எதிர்கொள்ளும்போதும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளின் போதும் இந்த சமுதாயம் பல வேளைகளில் தனது கோர முகத்தைக் காட்டிவருகிறது. ஆனால் தற்போது அதற்கெல்லாம் ஒருபடி மேலேப்போய், கரோனாவால் உயிரிழந்த நபர்களின் உடல்களை வாங்க அவர்களது குடும்பத்தினரே மறுத்திருப்பது பேரிடரின் உச்சக்கட்டம்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த நான்கு கரோனா நோயாளிகளின் உடல்கள் திரிசூரில் உள்ள பொது இடுகாட்டில் வைத்து தகனம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கரோனாவால் உயிரிழந்ததை அறிந்த குடும்பத்தினர், உடல்களைப் பெற மறுத்துவிட்டனர்.
இது குறித்து திரிசூர் அரசு மருத்துவமனையின் சுகாதார ஆய்வாளர் மொகம்மது கூறுகையில், இறந்தவர்களில் ஒரு பெண் உள்பட நான்கு பேரில் மூன்று பேரின் குடும்பத்தினர் உடல்களைப் பெற மறுத்துவிட்டனர். ஒருவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. எனவே, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அரசு செலவில் அவர்களது இறுதிச் சடங்குகளை செய்ய உத்தரவிடப்பட்டது. ஒன்றல்ல இரண்டல்ல சுமார் இரண்டு மாதங்கள், அந்த நோயாளிகளின் உடல்களை தகனம் செய்யாமல், உறவினர்களின் மனம் மாறும் என்று அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால், அப்படி நடக்கவில்லை.
மூன்று பேரையுமே அவர்களது உறவினர்கள்தான் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்கள் இறக்கும் வரை உறவினர்கள் தொடர்பு கொண்டு அவர்களது உடல்நலன் பற்றி விசாரித்தனர். ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாகக் கூறியபோது, தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், உடலை பெற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டனர்.
மருத்துவமனை பிணவறையில் இடமில்லாத நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்று நால்வரின் உடல்களும் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.
கரோனாவால் மனிதன் மட்டும் மரணிக்கவில்லை, மனிதமும் மரணிக்கிறது இதன் மூலம் உணரப்படுகிறது. நீங்கள் போராட வேண்டியது நோயுடன்தான், நோயாளிகளுடன் அல்ல என்பது எத்தனை ஆழமான வார்த்தைகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.