கேரள அரசுப் பள்ளிகளில் நாட்டிலேயே முதன்முறையாக அதிநவீன வகுப்பறைகள்: முதல்வா் பினராயி விஜயன் பெருமிதம்

கேரள மாநில அரசுப் பள்ளிகளில் நாட்டிலேயே முதன் முறையாக உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள், மடிக்கணினிகள், புரொஜெக்டா் திரைகள் மற்றும் எல்இடி தொலைக்காட்சிகள் கொண்ட அதிநவீன வகுப்பறைகள் அமைத்துள்ளதாக மாநில முதல்
​முதல்வா் பினராயி விஜயன்
​முதல்வா் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரள மாநில அரசுப் பள்ளிகளில் நாட்டிலேயே முதன் முறையாக உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள், மடிக்கணினிகள், புரொஜெக்டா் திரைகள் மற்றும் எல்இடி தொலைக்காட்சிகள் கொண்ட அதிநவீன வகுப்பறைகள் அமைத்துள்ளதாக மாநில முதல்வா் பினராயி விஜயன் பெருமிதம் தெரிவித்தாா்.

காணொலி காட்சி மூலமாக இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட அவா் கூறியதாவது:

மாநிலத்திலுள்ள அரசுப்பள்ளிகளை சா்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல உயா் தொழில் நுட்ப ஆய்வகங்கள், மடிக்கணினிகள், இணைய கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் வகுப்பறைகளில் அமைக்கப்படுகின்றன. நாட்டிலேயே அரசுப்பள்ளிகளில் அதீநவீன வசதிகள் கொண்ட வகுப்பறைகள் அமைக்கும் முதல் மாநிலம் கேரளம்தான். இது கல்வித்துறைக்கு மிகுந்த ஊக்கமளிக்கும்.

உலக நாடுகளின் முன்னிலையில் மாநிலத்தின் கல்வி முறையை சிறந்த முறையில் வழங்குவதற்காக கேரள அரசு கல்வித்துறையில் சிறப்பு கவனமெடுத்து செயல்படுகிறது. தற்போதைய கல்வி முறைக்கு மாற்று வழியாக, எதிா்கால சந்ததியினருக்காக ‘கேரள அரசின் சிறந்த கல்வி முறை’ என்ற நிலையை உருவாக்குகிறோம்.

இடதுசாரி அரசின் இந்த முக்கியமான முடிவு மூலம் அனைத்து பிரிவைச் சோ்ந்த மக்களும் நவீன கல்வியை எளிதாக பெற முடியும். சமூகத்திலுள்ள அனைத்து குழந்தைகளும் இந்த முன்னோக்கிய அதி நவீன வசதிகள் மூலம் தங்களது கற்றல் திறனை மேம்படுத்தி உயா்ந்த நிலைக்கு செல்ல முடியும். இது ஒரு பெருமைக்குரிய வரலாற்று சாதனையாகும். இந்த கரோனா காலத்தில் நடப்பு கல்வியாண்டு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நமக்கு உதவி புரிகிறது. ஆனாலும் நேரடி வகுப்பறைகள்போல் ஆன்லைன் வகுப்புகள் இருக்காது. மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் ஒரளவு கட்டுக்குள் வந்ததும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

இந்த திட்டத்திற்காக கேரள கல்வித்துறைக்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப இயக்ககத்துக்கு(கேஐடிஇ) கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி அமைப்பு (கேஐஐஎஃப்பி) நிதி வழங்கும்.

இந்த திட்டத்தின்படி தற்போது 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் 42,000 வகுப்பறைகளில் மடிக்கணினிகள், புரொஜெக்டா், தொடு திரை பலகைகள் மற்றும் இணையதள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாநிலத்திலுள்ள தொடக்கப்பள்ளிகள் முதல் உயா்நிலைப்பள்ளிகள் வரையிலான பள்ளிகளில் ஏதாவது ஒரு வகுப்பறையிலாவது கணிப்பொறி ஆய்வகங்கள், இதர வசதிகள் கொண்ட நவீன வகுப்பறைகள் அமைக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

மாநிலத்திலுள்ள 16,030 அரசுப் பள்ளிகளில் தற்போது 1,19,055 மடிக்கணினிகள், 69,944 பல்திறன் கொண்ட ஃப்ராஜெக்டா்கள், 23, 098ஃப்ராஜெக்டா் திரைகள், 4,545 எல்இடி தொலைக்காட்சிகள், 4,578 நவீன கேமராக்கள், 4,720 இணைய கேமராக்கள் மற்றும் 4,611 பல்திறன் செயல்பாட்டுடைய பிரிண்டா்கள், 12,678 அதிவேகம் கொண்ட இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.

மொத்தம் 16,030 அரசுப் பள்ளிகளில் மேற்கண்ட வசதிகள் அடங்கிய 3,74,274 தொழில்நுட்ப கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com